Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்ணாவிரதம்: சென்னையில் 500 பேர் பங்கேற்பு

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தனர்.

தா.பாண்டியன் பேசியதாவது:

மத்தியில் கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு அத்திட்டத்தை கைவிடும் செயலில் ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டு நிறுவனம் தினமும் 1 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுக்கிறது. இதை சுத்திகரிக்கும் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நம் நாட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனம் எடுக்கும் கச்சா எண்ணெய்க்கு டாலர் முறையில் விலை நிர்ணைக்கப்படுகிறது. அதனால், மக்களுக்கு வழங்கப்படும் எண்ணெய் விலை டாலர் உயர்வுக்கு ஏற்ப உயர்ந்து வருகிறது.

மக்கள்நலத் திட்டங்களுக்கு பல வகையில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 28 லட்சம் பம்ப்செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது மானியங்களை மத்திய அரசு படிப்படியாக குறைக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த3 மாதங்களுக்குள் நாட்டில் மதவெறி, வகுப்புவாதக் கலவரங்கள் நடக்கின்றன. பொது நிதிநிலை அறிக்கை, ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் படிப்படி யாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளனர். அதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. மாறாக, நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித் தனர். தமிழகத்தில் தலித்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x