Last Updated : 26 Mar, 2019 08:47 AM

 

Published : 26 Mar 2019 08:47 AM
Last Updated : 26 Mar 2019 08:47 AM

தேனியில் கரை வேட்டிகளிடம் கரை புரளும் ‘கரன்சி’- ‘தேர்தல் கால’ வியாபாரம் பலமடங்கு அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி

தேனி மக்களவைத் தொகுதியில் முக்கிய விவிஐபிக்கள் களமிறங்கியுள்ளதால் பிரதான அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இதனால் பெட்டிக்கடை முதல் பல்வேறு சிறுதொழில்கள் வரை பண நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் கடந்த சில ஆண்டுகளாக சிறுதொழில்கள் பாதிக்கப் பட்டன. சொந்தமாக தொழில் செய்து வந்த பலர் வேலையிழந்ததால் பிழைப்புத் தேடி  வெளியூர்களுக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் இம்மாவட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதால் பணப் புழக்கம் பல மட்டத்திலும் ஊடுருவத் தொடங்கி உள்ளது.

அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் களமிறங்கி உள்ளதால் களப் பணி அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம், வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பிரச்சாரம் என்று அனைத்தும் ஆரவாரமாக நடைபெறுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோரும் அதே அளவுக்கு செலவு செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. இதனால் கரை வேட்டிகளின் களப் பணியில் ‘கரன்சி'  புகுந்து விளையாடுகிறது. ஆட்களை அழைத்துவர வாகனம், வருபவர்களுக்கு பணம், மைக் செட், மண்டபம், மூன்று வேளை பிரியாணி உட்பட உணவு,  மாலை, கரை வேட்டிகள், பெட்ரோல், பந்தல் அமைப்பு என்று அனைத்து தேவைகளும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளது. 

தினமும் வட்டார அளவில் நிர்வாகிகள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பிரச்சாரத்துக்கு  அழைத்து வரப்படுவதால் அவர்களுக்கும் கணிசமான தொகையை ஒதுக்குகின்றனர். மேலும் எதிரணியினர் தங்களுக்குச் சாதகமாக மறைமுக வேலைகளைச் செய்யவும் பணம் கைமாறுகிறது. தேர்தல்காலச்  செழிப்பால்   மது, பிரியாணி, டீ என்று  பெட்டிக் கடை முதல் நடுத்தர நிறுவனங்கள் வரை வியாபாரம் களைகட்டி உள்ளது. 

இது குறித்து சிறு வியாபாரிகள் சிலர் கூறுகையில், தேர்தல் மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை  உயர்ந்துள்ளது. பிரச்சாரத்தின்போது வியாபாரம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

வாடகை கார் ஓட்டுநர்கள் கூறுகையில், பல மாதங்களாக தொழில் மந்தமாக இருந்தது. தற்போது பிரச்சாரம், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ளதால் எங்களுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரமில்லை, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x