

தேர்தலுக்குப் பின்னர் வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.
திமுகவில் இணைய எவ்வளவோ முயன்றும் அது சாத்தியாமாகததால் அதிருப்தியில் இருக்கிறார் மு.க.அழகிரி. வெளிநாட்டில் இருந்து அண்மையில் மதுரை திரும்பிய அவர், ஒரு வாரத்தில் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிரார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை குறியீடு போட்டு கிண்டல் செய்திருக்கிறார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.
தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை எனப் பதிவிட்டிருக்கிறார்.
அந்த ட்வீட்டின் கீழே ஒரு வீடு அதை நோக்கி ஒரு அம்புக்குறி அந்தப் பாதையில் ஓர் ஆமை என்று குறியீடும் போட்டிருக்கிறார். ஆமை புகுந்த வீடு என்ற சொலவடை உண்டு. அதைக் குறிப்பிடும் வகையில் மதிமுக திமுகவுக்குள் புகுவதாக சொல்லியிருக்கிறார் துரை தயாநிதி.
சில மாதங்களுக்கு முன்னதாக மூத்த அரசியல்வாதியான திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை துரை தயாநிதி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்குப் பரவலாக கண்டனங்கள் கூட எழுந்தன. இந்நிலையில், இப்போது அவர் மற்றுமொரு மூத்த அரசியல்வாதியான வைகோவைக் கிண்டல் செய்துள்ளார்.