

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், இன்று காலையில் மாரடைப்பால் காலமானார்.
கோவை அருகே உள்ள சூலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், இன்று காலை 7 மணி அளவில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படியே மயங்கி விழுந்தார் கனகராஜ். இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் செயல்பட்டு வந்தவர் கனகராஜ். சூலூர் தொகுதியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அவரின் மரணம், அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜின் திடீர் மரணத்தையொட்டி 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது போல், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.