Published : 04 Mar 2019 04:59 PM
Last Updated : 04 Mar 2019 04:59 PM

ரூபாய் 2,000 நிதியுதவி: படிவங்களை அதிமுகவினர் மூலம் வழங்குவதை தடுத்து நிறுத்துக; தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு

ரூபாய் 2,000 நிதியுதவி பெறுவதற்கான படிவங்களை அதிமுகவினர் மூலம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழக அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் வாக்கு பெறுவதற்காகவே வழங்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் - கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான வைகைச்செல்வன் அறிவித்து இருப்பதால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்துக்கு இன்று எழுதியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கும் புகார் மனு எழுதியுள்ளார்.

அதில், 'அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான வைகைச் செல்வன் பொதுக்கூட்டம் ஒன்றில் 28.2.2019 அன்று பேசிய போது, மாநில அரசால் வழங்கப்படும், தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதி உதவியான ரூ.2,000 உள்பட ரூ.3,000-ம் சுமார் 3 கோடி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 கோடி பேர் தங் களுடைய வாக்குகளை அதிமுகவுக்கு ஆதரவாக அளிப்பார்கள். எனவே தங்கள் கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பகிரங்கமாகப் பேசியுள்ளார். வைகைச்செல்வனின் பேச்சு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்தப் பேச்சு இத்துடன் சிடியாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட உடனேயே, சில அரசியல் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது முற்றிலும் தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகவே செய்யப்படுகிறது.

அதாவது அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எங்கள் கட்சி வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கு எதிரானது அல்ல; ஆனால் அந்தத் தொகை இப்போது அதிமுகவுக்கு ஆதரவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று கவலை கொண்டுள்ளது. அத்தொகை அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஆதரவாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆளும்கட்சி கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரின் பொதுக்கூட்டப் பேச்சின் மூலம் அது அதிமுகவுக்கு ஆதரவாக துஷ்பிரயோகம் செய்யப்படவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே 2,000 ரூபாய் வழங்கப்படுவது, விரைவில் வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தூண்டுவதற்காகத்தான் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இது விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு எதிரானதாகும் எனவே, இத்திட்டம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு பயன்படப் போவதில்லை.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேற்கண்ட அரசுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்தத்தொகை, மாநிலத்தின் கருவூல நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது அரசு கருவூலநிதி. ஆளும் அதிமுக கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயத்துக்காக வழங்கப்படுகிறது என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. எனவே தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதிப்படுத்த அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

எல்லா மாவட்டங்களிலும் அதற்கான படிவங்கள் எல்லாம் ஆளும் அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தத் தொகை ரூ.2,000 வழங்கப்படுவதற்கான நபர்களின் பெயர்கள் அவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று நாங்கள் அறிய வந்துள்ளோம். இதன் மூலம் அரசு தன்னுடைய நிதியை அதிமுக கட்சியின் நலனுக்காக, வாக்குகளை வாங்குவதற்காகவும், அதிமுக  தொண்டர்களின் பைகளை நிரப்புவதற்காகவும் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், நான் தேர்தல் ஆணையத்திடம், இத்திட்டத்தில் உள்ள சட்ட விரோதச் செயல்களைப் பரிசோதித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை அரசு வலைதளத்தில் பெயர்களை வெளியிடுவது போன்ற வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றி அடையாளம் கண்டு அதன்படி நிதி உதவியை வழங்கும் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

படிவங்களை அதிமுக நிர்வாகிகள் மூலம் வழங்குவதைத் தடுத்து நிறுத்தும் படியும், அவர்களை நிதி உதவி வழங்குவதில் ஈடுபடுத்த வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஆளும் அதிமுகவின் இத்தகைய நடவடிக்கை தவறாகப் பயன்படுத்துவதற்கும், ஆளும் அதிமுகவின் தேர்தல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும். இதன் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' என்று ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x