ரெய்டுக்கு நான் காரணமா? நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்: ஏ.சி.சண்முகம் ஆவேசம்
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது இதில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதாக வருமானவரித்துறையினர் தெரிவித்ததையடுத்து அரசியலில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் ஆளும் கட்சியினரைக் குறிவைத்து அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தப்பட்டதற்கு அம்மாநிலத்தில் மோடி அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமானவரிச் சோதனையினர் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மோடி அரசு மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் மேலும் ஏ.சி.சண்முகமும் பாஜகவும்தான் இதற்குக் காரணம் என்று துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஏ.சி.சண்முகம், வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு என் மீது பழி போடுவதா? என்று கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் கூறியதாவது:
துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.
துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.
இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.
பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.
இவ்வாறு கூறினார் ஏ.சி.சண்முகம்.
