

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயின் வயிற்றில் இருந்து குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் காலனி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி பொம்மி (20). இவர் சுகப்பிரசவத்திற்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கிராம செவிலியர் முத்துகுமாரி பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதில், குழந்தையின் தலை துண்டாக வெளியில் வந்தது. உடல் பகுதி பொம்மியின் வயிற்றுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த உடல் வெளியே எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கணவர் அளித்த புகாரின் பேரில், கூவத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு சுகாதார மாவட்டத் துணை இயக்குநர் பழனி கூறியதாவது: ''குழந்தை பிரசவத்துக்கு முன்பே தாயின் வயிற்றிலேயே இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், திசுக்கள் அழுகித் தலை துண்டாக வெளியே வந்திருக்கலாம். மருத்துவர் பிரசவம் பார்த்திருந்தால் அறிகுறிகளைக் கண்டறிந்திருப்பார். செவிலியர் என்பதால் நுட்பமாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். இதற்காக சென்னையில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கூவத்தூர் வந்து விசாரணை மேற்கொள்வர்'' என்றார்.
உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே நடந்த சம்பவத்துக்கு எதிராக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஈசிஆர் சாலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.