Last Updated : 19 Mar, 2019 10:43 AM

 

Published : 19 Mar 2019 10:43 AM
Last Updated : 19 Mar 2019 10:43 AM

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?- 101 வயதில் மலரும் நினைவுகளுடன் கவிஞர் பி.கே.முத்துசாமி

உலகத் திரைப்படங்களில் இருந்து இந்திய திரைப்படங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுபவை பாடல்கள்தான். இந்திய திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருந்தாலும், மாறாமல் இருப்பது பாடல்களே. பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள், காலங்களைக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன..

பாடல்களை உருவாக்குவதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பலரின்  பங்களிப்பும் உண்டு. சில பாடலாசிரியர்களே  மக்கள் மத்தியில்  பிரபலமாக உள்ளனர்.  ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காலத்தைக் கடந்து நிற்கும்  பாடல்களை இயற்றிய மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கவிஞர் சுரதா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

எனினும், பல வெற்றிப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் சிலர், பொதுவெளியில்  அடையாளம் காணப்படாதவர்களாக உள்ளனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமியும் ஒருவர். `வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் இவர்,  1958-ல் வெளியான  `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’  என்ற பாடலை எழுதியவர்.

தமிழகத்தில் அக்காலத்தில் இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை எனும் அளவுக்கு, பட்டிதொட்டி எங்கும் இப்பாடல் வெகு பிரபலம். காலத்தைக் கடந்தும் இப்பாடல் சில இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல, `காவிரியின் கணவன்’ என்ற படத்தில் `சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து’ என்ற பாடல், `பொன்னித் திருநாள்’  படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து’ போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார் இவர்.

ஏ.கே.வேலன் இயக்கிய பொன்னித் திருநாள் திரைப் படத்தில் கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், சுரதா ஆகியோருடன் இணைந்து,  கவிஞர் பி.கே.முத்துசாமியும் பாடல் எழுதியுள்ளார். பாடலாசிரியர் பெயர்ப்  பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதேபோல, இவர் எழுதிய ஒரு நாடகத்தில், நடிகவேள்  எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில், ‘குடத்துக்குள் ஒளிரும் குத்துவிளக்கு, வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி.  இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். வெண்பா வேந்தர், இந்த நுாற்றாண்டின் புகழேந்தி போன்ற விருதுகளும் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்போது 101 வயதை எட்டியுள்ள கவிஞர் பி.கே.முத்துசாமி, திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். குறிப்பாக,  திமுகவில் இணைந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும்  கவிஞர் பாரதிதாசனுக்கு பரிச்சயமானவராக இருந்துள்ளார். பிற்காலத்தில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பி.கே.முத்துசாமி, சிறிய வாடகை வீட்டில், வறுமையில் வாடுவதையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.5 லட்சம் வழங்கி உதவியுள்ளார். இந்த தொகைக்கான காசோலையை தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  2015-ல் நேரில் வந்து வழங்கினார். இந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி  மற்றும் முதியோர் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்ந்து வரும் பி.கே.முத்துசாமி, தற்போதும் யார் உதவியுமின்றி தனியாகவே தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார். வாசிப்பு, எழுத்துப் பணிகளும் தொடர்கின்றன.

அவர் எழுதிய பாடல்கள், நூல்கள் குறித்து அவர்  பகிர்ந்துகொண்ட போதிலும், வயது முதிர்வு காரணமாக அவற்றை கோர்வையாக சொல்ல இயலவில்லை. அவரது பேரன் ஆர்.புதுப்பட்டி எஸ்.சக்திவேலிடம் பேசினோம்.

“தாத்தா முத்துசாமி, அடிப்படையில் விவசாயி.  பள்ளிக் கல்வியுடன் கல்வியை முடித்துக்கொண்ட அவர், தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தால், ஆயிரக்கணக்கான வெண்பா இலக்கியங்களை எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள வெண்பா கவிஞர்களில் அவர் குறிப்பிடத்தக்கவர். அவரது திரைப்படப் பாடல்கள், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

சரியான வழிகாட்டுதல் இல்லாததால், அவரது பல படைப்புகள், வேறு நபர்களின் பெயரில் வெளியாகியுள்ளன. அவருக்கு இரு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் இளங்கோவன் இறந்துவிட்டார்.  இரண்டாவது மகன் மன்னர்மன்னன் சென்னையில், திரைப்பட கேமராமேனாகப் பணியாற்றுகிறார். மகள் கலையரசி ஆர்.புதுப்பட்டியில் உள்ளார். மனைவி பாவாயம்மாள் காலமாகிவிட்டார்.

குடும்ப அரவணைப்பு இருந்தபோதும், அவர் தனிமையைத்தான் நாடுவர். 101 வயதிலும் தனியாகவே வசித்து,  தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்.

பாடல்கள், வெண்பா, கதை எழுதுவதில் ஈடுபட்ட அவர், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இலக்கியமும் கற்பித்து வந்தார். அவரைப் போற்றும் வகையில், கிராமத்தில் உள்ள கலை மன்றத்துக்கு அவரது பெயரை வைக்க வேண்டுமென்பதும் எங்கள் எண்ணம்” என்றார்.

அண்ணா செய்த உதவி...

ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி எஸ்.பி.கருப்பண்ணன்- காளியம்மாளுக்கு  1918 அக்டோபர்  20-ம் தேதி பிறந்தார் பி.கே.முத்துசாமி. விவசாயம் மற்றும் மிதிவண்டிக் கடை பணியில் ஈடுபட்ட கவிஞர் முத்துசாமி, திரைப்படம் மீது கொண்ட ஆர்வத்தால் தனது நிலத்தை விற்பனை  செய்து,  அதில் கிடைத்த பணம் மூலம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தை எடுக்க முயன்றார்.  எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அந்த திரைப்படத்தை ஏ.கே.வேலனிடம் ஒப்படைத்துவிட்டார்.

பின்னர், அதே படத்தில் பாடல் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

கடந்த 1948-ல் கிராமத்தில் தனி பள்ளியை தொடங்கி, மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளார். 1957-ல் பிலிம் சேம்பர் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது திரைப்பட உரிமத்தை, முன்னாள் முதல்வர் அண்ணா ரூ.14,500-க்கு விற்பனை செய்ய உதவியுள்ளார்.

அண்ணா எடுத்த ‘காதல் ஜோதி’ என்ற படத்தில் கவிஞர் பி.கே.முத்துசாமி ஒரு பாடலை எழுதியுள்ளார். எனினும், அந்த திரைப்படம் வெளியாகவில்லை. 2002-ல் கவிஞர் வைரமுத்து, தனது பிறந்த நாளில் கவிஞர் பி.கே.முத்துசாமியை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மூட்டையில் முடங்கிய படைப்புகள்!

கவிஞர் பி.கே.முத்துசாமி, ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அவரது படைப்புகளை பாதுகாக்க போதிய இட வசதி இல்லாததால்,  மூட்டைகளில் கட்டி வைத்துள்ளார். தன்னை சந்திக்க வருவோரிடம் வெகு ஆவலாக அந்த மூட்டையில் உள்ள படைப்புகளை எடுத்துக் காண்பித்து, அவை உருவான விதம் குறித்து  விளக்குகிறார், வெளிச்சம் படாத கவிஞர் முத்துசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x