

தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர், போலீஸார் ஆங்காங்கே நடத்தும் வாகன சோதனையில் ஏராளமான பொருட்கள் பிடிபடுகின்றன. நேற்றிரவு ராயப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அண்ணாசாலை ஆய்வாளர் தலைமையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த மாருதி ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தை ஏழுகிணறைச் சேர்ந்த பிரமோத் குமார் (38) ஓட்டி வந்தார். உடன் ராஜீவ் பட்டேல் (36) என்பவர் இருந்தார்.
வாகனம் பாரிமுனையிலிருந்து விமான நிலையம் நோக்கிச் செல்வதாகத் தெரிவித்தனர். மாருதி ஆம்னி வாகனத்தை போலீஸார் சோதனை செய்தபோது அந்த வாகனம் பாரிமுனையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார்.
வாகனத்தை சோதனையிட்டபோது அதில் செல்போன்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் 18 கட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் ஆம்னி வாகனத்தை காவல் நிலையம் எடுத்து வந்து சோதனை செய்தனர்.
சோதனையில் வாகனத்தில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 2.5 கிலோ எடையுள்ள 6 தங்க பிஸ்கட் . தங்க வளையல், வைரக் கம்மல் 1 செட், சிறிய அளவிலான 6 வைரக் கல், வைரம் பேப்பர் பீஸ், 40 கிராம் எடை கொண்ட 5 சிறிய ஐம்போன் சிலைகள் , 30 ஐ போன்கள், 9 கேமராக்கள் என கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாததால்அதனைக் கைப்பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரி வசம் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.