பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நக்கீரன் ஆசிரியர் கோபாலை சென்னையில்தான் விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நக்கீரன் ஆசிரியர் கோபாலை சென்னையில்தான் விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை வரும் ஏப்ரல் 1-ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வீடியோவுடன் நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனிடையே வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் வரும் 30-ம் தேதி கோவையில் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

சிபிசிஐடி அனுப்பிய சம்மனை எதிர்த்து நக்கீரன் கோபால் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்கீரன் ஆசிரியர் கோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராக கோவைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்த அதிகாரி கோவைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து சம்மன் அனுப்புகிறார். இது தேர்தல் நேரத்தில் நக்கீரன் கோபாலின் பத்திரிகைப் பணிகளை முடக்கும் செயலாக உள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.  ஆனால் இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வைத்து மட்டுமே விசாரிக்க வேண்டும்.

தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்தார்.

அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர், ''பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொலிகளை வெளியிட்டதாக நக்கீரன் கோபால் தெரிவித்திருக்கிறார். வெளியிட்டது சில காணொலிகள்தான். இன்னும் 1100 விடியோக்கள் இருப்பதாகவும் நக்கீரன் கோபால் தெரிவிக்கிறார் எனவே அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வழக்கு எப்போது சிபிஐ வசம்  ஒப்படைக்கப்படும்? என கேள்வி எழுப்பினார். சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருவதாகவும், அதுவரை சிபிசிஐடி விசாரணை நடத்தும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, நீதிபதி, நக்கீரன் கோபால் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளி இல்லை என்பதால், அவரை விசாரணைக்கு மட்டுமே ஆஜராக உத்தரவிட முடியும். அதே நேரத்தில் விசாரணையில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராக உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை ஓய்வுபெற்ற அல்லது தற்போது உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் வாசுகி என்பவர் தொடர்ந்த வழக்கில், அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in