

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இணையாக இந்தியா இணைந்ததன்மூலம் அவர்களுக்கு இணையாக பாதுகாப்புத்துறையில் வளர்ந்துள்ளோம் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் “செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் வான் வல்லமையை நிலைநாட்டும் வகையில் நடந்த இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என பெயரிடப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் இந்து தமிழ் திசை இணையதளம் சார்பில் கேள்வி எழுப்பியதற்கு அவர் அளித்த பதில்:
இதனால் இந்தியா அடையப் போகும் பயன் என்ன? இந்த சோதனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஒட்டுமொத்த இந்திய பாதுகாப்பையும் கையும் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணி இது. இதன் மூலம் நம் எதிரியின் செயற்கைக்கோளை தேவை ஏற்படும் சமயங்களில் நாம் அழிக்க முடியும்.
ஒடிஷா மாநிலத்தில் வைத்து நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நமக்கு மேலே இருக்கும் செயற்கைகோள்களுக்கு கணக்கே கிடையாது. அதில் சீனா, ரஷ்யா என எல்லா செயற்கைகோள்களும் இருக்கும். நம் நாட்டில் நாம் தான் வானில் செயற்கைகோள் விட்டிருப்போம் என்பதுதான் பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் புரிதல்.
ஆனால் குறிப்பிட்ட வான் தூரத்துக்கு மேலே சென்று விட்டால் அது சர்வதேச வான்வெளியாகிவிடும். இது என் இடம். உன் இடம் என பிரித்து விட முடியாது. நமக்கு மேலே இருப்பதாலேயே அதை நம் இடம் என சொல்லிவிடவும் முடியாது. அதனால் அங்கெல்லாம் பிற நாட்டின் செயற்கைகோள்கள் பறந்து கொண்டுதான் இருக்கும்.
அங்கே மேலே இருந்து நம்மை வேறு நாடுகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் நமக்குத் தெரியாமலோ, அல்லது நமக்கு இடைஞ்சல் தரும் வகையிலோ ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தால் நாம் இனி அவர்களை வீழ்த்த, இந்த திட்டத்தின்படி மூன்று நிமிடம் முதல் 5 நிமிடங்களே போகும்.
இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் ஒரு ஏவுகணையை அனுப்புகிறோம் என்றால், அது போய் சேர வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கும். நாம் தூரத்தை மட்டும் கணக்கிட்டு அனுப்பினால் போதும். ஆனால் இது அப்படியான முறை அல்ல. அந்த செயற்கைகோள் நகர்ந்து கொண்டே இருக்கும்.
நமது ஏவுகணையும் நகர்ந்து போய், இரண்டும் பொருந்தி ஒரே இடத்தில் சந்தித்து அழிக்க வேண்டும். இதில் நொடிகள் தப்பினால் கூட இலக்கு மாறிவிடும். செயற்கைகோள் உத்தேசமாக ஒரு நொடிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். அதே நேரத்தில் ஏவுகணை 3 கிலோ மீட்டர் செல்லும். இதனால் அங்கு நேர மேலாண்மை ரொம்ப முக்கியம்.
இப்போது வெற்றி பெற்றுள்ள இந்த மிஷின் சக்தி, இந்தியாவின் பாதுகாப்புக்கு நிறைய கைகொடுக்கும். பொதுவாக அணு ஆயுதங்கள் நம்மிடம் இருக்கும்போது தான் மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படும். நம் நாட்டின் கருத்துக்கு மதிப்பு இருக்கும். யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைப் பார்த்து தானே உலகமே பயப்படுகிறது? இது நமது பலத்தை உலகநாடுகளின் மத்தியில் நிரூபிக்கும்.
இதனால் நமது நாட்டிடம் யாரும் வந்து வாலாட்ட மாட்டார்கள். நாம் ஏதாவது செய்தால் இந்தியா நமது செயற்கைகோளை அழித்து விடுவார்கள் என்னும் பயம் இனி அவர்களுக்கு இருக்கும். உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளிடம் தான் இந்த திறமை இருந்தது.
இப்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. நாம் நான்காவதாக இணைந்தோம் என்பதை விட, அவர்களுக்கு இணையாக பாதுகாப்புத்துறையில் வளர்ந்துள்ளோம் என்று சொல்லலாம். இதனால் நம்மை ‘ஸ்பேஸ் பவர்’ என்று சொல்லலாம்” என்று தெரிவித்தார்.
பேட்டி . என்.சுவாமிநாதன்