

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். தடுப்புக் காவல் சட்டம் என்பது உலகில் ஜனநாயக நாடுகளில் எங்குமே இல்லாதது. எனினும் இந்தியாவில் மட்டும் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்ற பெயரிலும் தடுப்புக் காவல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் 1982-ம் ஆண்டில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது. அதாவது இந்த வகைக் குற்றங்களில் ஒரு தடவை ஈடுபடுவோரை கூட குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம் என சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. தனி நபர்களின் பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமையை மறுப்பதாக இந்த சட்ட திருத்தம் உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளின் ஊழல்கள், அரசு அதிகாரிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வாறு தகவல்களை வெளியிடுவோரை இனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்ட திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், இது தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.