Published : 15 Mar 2019 07:12 AM
Last Updated : 15 Mar 2019 07:12 AM

தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிச்சலுகை கிடைக்கவில்லை: உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஏமாற்றம்

தீப்பெட்டித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிச்சலுகை கிடைக்காததால், உற்பத்தி யாளர்களும், தொழிலாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் மாதந்தோறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. வரும் 19-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.

அனைத்து மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரான மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமை வகிப்பார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், தீப்பெட்டி மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், வரியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கடும் விரக்தியில் உள்ளனர்.

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ``டெல்லியில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீப்பெட்டிக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அது நிறைவேறவில்லை. வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்திலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுபோல தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போதும், அப்போதைய நிதி அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்தும், தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் பரிந்துரை கடிதத்தை வழங்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதேபோல், மத்திய அரசு தீப்பெட்டி தொழிலையும் கண்டு கொள்ளவில்லை என்றால், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, வேலூர் மாவட் டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரி பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங் கும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிரந்தர மாக மூடப்படும்.

மேலும், தீப்பெட்டி தொழிலின் சார்பு தொழிலான அட்டை, வெள்ளை குச்சி தயாரித்தல், ரசாயன மூலப்பொருட்கள், பிரின்டிங், ஸ்கோரிங் போன்ற தொழில்களும் முடங்கிவிடும். எனவே, சிறு குறு தொழில் செய்கிற நடுத்தர முதலீட்டாளர்களை ஊக்கு விக்கும் வகையில் தீப்பெட்டி தொழி லுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x