ஓபிஎஸ் மீது வைத்திருந்த கடைசி நம்பிக்கையும் வீணானதால் வெளியேறினாரா கண்ணப்பன்?
அதிமுகவிலிருந்து விலகும் ராஜகண்ணப்பன் ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர். கட்சி இணைப்புக்குப்பின் தனக்கு உரிய இடம் கிடைக்கும் என மற்ற ஆதரவாளர்களைப்போல் நம்பி பின் அது நடக்காததால் வெளியேறுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் மிகச்செல்வாக்குமிக்க மனிதராக வலம் வந்தவர் கண்ணப்பன். பொருளாளர் பதவி வகித்தவர். மூன்று துறைகள் அதுவும் முக்கியமான துறைகளை கையில் வைத்திருந்த அவர் 91 முதல் 96 வரை செல்வாக்காக இருந்தார். அதன்பின்னர் வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்தார். 2009-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. அதில் ஒபிஎஸ் அணியில் மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன், கே.பி.முனுசாமி, செம்மலை, செஞ்சி ராமச்சந்திரன், பொன்னையன், எம்பி மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட பலர் இணைந்தனர்.
அதிமுகவில் ஒரு கட்டத்தில் அணிகள் ஒன்றானது ஆனால் அதிமுகவில் ஒபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டனர் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். மைத்ரேயன் மாநிலங்களவையில் முக்கிய பொறுப்பை எதிர்ப்பார்த்தார் கிடைக்கவில்லை. பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடின்றி உள்ளனர். செம்மலைக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
இதேபோன்றுதான் பலரது நிலையும் அதிமுகவில் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். கவிஞர் சிநேகன் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டர். ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான கே.சி.பழனிசாமி பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான ராஜ கண்ணப்பன் தனக்கு ராமநாதபுரம் அல்லது சிவகங்கை அல்லது மதுரை தொகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.
சிவகங்கையில் எச்.ராஜாவுக்காக பாஜகவுக்கு சீட்டு ஒதுக்கப்படும், ராமநாதபுரம் கட்டாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால் ராமநாதபுரமும் பாஜகவுக்கே ஒதுக்கப்பட்டு, மதுரை ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் வெளியேறி திமுகவை ஆதரிக்கும் முடிவெடுத்துள்ளார்.
ஒபிஎஸ்சை நம்பி அவரது அணியிலிருந்தேன் நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டார், என இன்று கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார்.
நம்பி வந்தவர்களுக்கு ஒபிஎஸ் துரோகம் செய்துவிட்டாரா? என்கிற கேள்விக்குகண்டிப்பாக துரோகம் செய்துவிட்டார். அவருடைய மகனுக்கு சீட்டு வாங்குவதற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார். என கண்ணப்பன் தெரிவித்தார்.
பொதுவாக கட்சித்தலைவர்கள் அவர்களை இக்கட்டான கட்டத்தில் ஆதரித்தவர்களை அவர்கள் நல்ல நிலைக்கு வந்தால் பதவி கொடுத்து அழகுபார்ப்பார்கள் ஆனால் ஒபிஎஸ் அதற்கு நேர் எதிர், ஓரங்கட்டி அழகுபார்ப்பார் என்றார் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர் ஒருவர்.
தேர்தல் ஆரம்பித்து முதல்வாரத்திலேயே முதல் விக்கெட் விழுந்துள்ளது. போகப்போக பாதிப்பு எப்படி இருக்கும் பொறுத்திருந்துத்தான் பார்க்கவேண்டும்.
