Published : 20 Mar 2019 11:20 AM
Last Updated : 20 Mar 2019 11:20 AM

சிங்க வால் குரங்குகள் பாதுகாக்கப்படுமா ?

அழிந்து வரும் அரிய வகை வன உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்கும் திட்டங்களை,  வனத் துறையினர் முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும், குரங்கு இனத்தைச் சேர்ந்தவை சிங்க வால் குரங்குகள். இதன் வெளிப்புறத் தோலில் உள்ள ரோமங்கள் கரு நிறத்தில் மின்னும் தன்மை கொண்டவை. 

இதன் வால்,  சிங்கத்தின் வால்போல இருப்பதால் ஆங்கிலத்தில் இதை `லயன் டெய்ல் மகாக்’ என்றழைப்பர். தமிழில் இதற்கு `சோலை மந்தி’ என்று பெயருண்டு.

ஆனால், ஆங்கில வார்த்தையை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து, `சிங்க வால் குரங்கு’ என்று  அழைக்கிறார்கள். இதற்கு ‘கருங் குரங்கு’ என்றும் பெயர் உண்டு. சங்க இலக்கியங்களில் `நரைமுக ஊகம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளை நிறத்திலான பிடரிப் பகுதியின் ரோமங்கள்  இந்த விலங்குக்கே உரிய சிறப்பாகும். எனினும், இதன் முகத்தில் ரோமம் இல்லாமல், கருப்பு நிறத்தில் இருக்கும். சுமார் 3 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இதன் வால் பகுதி மட்டும் சுமார் 25 செ.மீ.  நீளம் இருக்கும். வாலின் நுனிப் பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு  ரோமக் கொத்து இருக்கும். இது ஆண் குரங்குகளுக்கு அதிகமாகவும், பெண் குரங்குகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும்.

கூச்ச சுபாவம் அதிகம்!

வெப்ப மண்டல மழைக் காடுகளில் மட்டும் வாழும் இது,  பகல் பொழுதில் மட்டுமே  சுறுசுறுப்புடன் காணப்படும். மரம் ஏறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இந்தக் குரங்கு, பெரும்பாலான நேரத்தில் உயர்ந்த மரக் கிளைகளிலேயே இருக்கும். மிகவும் கூச்ச உணர்வு கொண்ட இந்தக் குரங்குகள், மனிதர்களைத் தவிர்த்தே வாழ விரும்புபவை. மேலும், 10 முதல் 20 குரங்குகள் ஒரு குழுவாக வாழும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென  ஒரு எல்லையை வகுத்திருக்கும். தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்போது,  மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும். சில  நேரம் இரு குழுக்களிடையே தகராறும் ஏற்படும்.

20-30 ஆண்டுகள் வாழும்!

இந்தக் குரங்கின் பேறு காலம் 6 மாதங்களாகும். பிறந்தது முதல் ஓராண்டு வரை குட்டி, தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள், மிருகக் காட்சிசாலைகளில் சுமார்  30 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை இவை உண்கின்றன. பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே செலவிடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இவை விரும்பி உண்ணும் பழ வகைகள் இருப்பதால், அங்கு வசிக்கின்றன.

குறிப்பாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிங்க வால் குரங்குகள் உள்ளன.

கல்லார் வனப் பகுதியில்...

இங்குள்ள அடர்ந்த வனப் பகுதிகளில், குறிப்பாக கல்லார் காட்டுப் பகுதியில் இவை  அதிக அளவில் உள்ளன. பசுமைபோர்த்திய அடர்ந்த வனப் பகுதி  மற்றும் மலைக்காடு என்பதால், இப்பகுதியை அவை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

அண்மைக்காலமாக  மலைகள் மற்றும்  அடிவாரப் பகுதிகளில், சிங்க வால் குரங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டே செல்வதாலும், இவற்றுக்கான இயற்கையான உணவு வகைகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவும் இவற்றின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து கொண்டே வருகிறது.

“அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்க வால் குரங்குகளை பாதுகாக்கும் வகையில், அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தி, அவை வாழத் தக்க சூழலை உருவாக்க வேண்டும். அவற்றுக்கான உணவுத் தேவைகள் காடுகளிலேயே பூர்த்தியாக வழிவகை காண வேண்டும். மருந்து தேவைக்காக இவற்றை வேட்டையாடுவதைத்  தடுக்க வேண்டும்” என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x