கிரண்பேடியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் நாஞ்சில் சம்பத்: அடுத்த ராதாரவியா?

கிரண்பேடியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் நாஞ்சில் சம்பத்: அடுத்த ராதாரவியா?
Updated on
1 min read

திமுகவுக்கு போதாத காலம் என்பதுபோல் பெண்களை விமர்சித்து நட்சத்திர பேச்சாளர்கள் பேசுவதும் அதுசமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நாஞ்சில் சம்பத் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் திமுக, தேமுதிக மோதலுக்கு முக்கிய காரணியாக அமைந்த தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகன் சந்திப்பின்போது அதை துரைமுருகன் பேட்டியில் சொல்லிவிட கோபமடைந்த பிரேமலதா மறுநாள் அந்த கோபத்தை ஊடகங்கள்மீது காட்டினார்.

இதைக்குறிப்பிட்டு பேசிய திமுக தலைமைகழக பேச்சாளர் ஈரோடு இறைவன் என்பவர் பிரேமலதா குறித்து கொச்சையாக பேசியது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.

அதன்பின்னர் நடிகர் ராதாரவி திரைப்பட ப்ரமோஷன் விழாவில் நயன்தாரா குறித்து தவறாக பேச அது பலராலும் கண்டிக்கப்பட்டது. முதலில் கண்டித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்து அவர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட அது என்ன இடை நீக்கம் நானே முழுதாக விலகி விடுகிறேன் என ராதாரவி விலகினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இம்முறை நாஞ்சில் சம்பத். இவர் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என சென்று அரசியலே வேண்டாம் என துறவரம்பூண்டு தற்போது திமுகவுக்காக மேடை ஏறுவேன் என ப்ரீலான்ஸ் பேச்சாளராக களம் இறங்கி பேசிவருகிறார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பேசிய நாஞ்சில் சம்பத்  இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர், இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்? என்று பேசிய அவர் மேலும் சர்ச்சை பேச்சுக்களை பேசினார்.

மீண்டும் ஒரு பெண்ணை விமர்சித்து பிரபல திமுக பேச்சாளர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ராதாரவிபோல் இவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பெண்களை அவதூறாக திமுகவினர் பேசுவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கண்டித்திருந்தார்.

அவர் கண்டித்து சில நாட்கள்கூட ஆகாத நிலையில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சை. ராதாரவிக்கு ஒரு நியாயம் நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு நியாயம் திமுகவில் இருக்காது என நம்பலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in