Published : 28 Mar 2019 10:05 AM
Last Updated : 28 Mar 2019 10:05 AM

சாஃப்ட்வேர் சாம்ராஜ்யம்!- வளர்ச்சிப்பாதையில் கோவை மென்பொருள் ஏற்றுமதி!

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் கோவை. வழக்கமாக, கோவை என்றால், ஜவுளி, இயந்திரங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட், இன்ஜினீயரிங் உதிரி பாகங்கள்தான்  நினைவுக்கு வரும். ஆனால், சப்தமில்லாமல் ஒரு துறை ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அது, மென்பொருள் என தமிழில் குறிப்பிடப்படும் சாஃப்ட்வேர் உற்பத்தி.

கடந்த ஓராண்டுக்கு முன்னரே கோவையின் மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.15 ஆயிரம் கோடியைத்  தாண்டி  சாதனை படைத்ததாகக் கூறுகின்றனர் இத்துறையினர். தற்போது இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கும்.

2006-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பெரிய அளவுக்கு இருந்தது. கோவையில் ரூ.380 கோடி ரூபாய் மதிப்பில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட்டது. அதேபோல, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளிலும், புதிய தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாகின. தனியார் நிறுவனங்கள் அமைத்த மென்பொருள் பூங்காக்களும் பெரும் வளர்ச்சி கண்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சாப்ட்வேர்  நிறுவனங்களில், ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.

பல்லாயிரம் கோடி ஏற்றுமதி!

2015 வரை கோவையில் 35 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே இருந்த நிலையில், தற்போது இது பல மடங்காக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களின் மென்பொருள் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி மதிப்பிலான மென்பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன.இது தொடர்பாக கூடுதல் விவரம் அறிய, கோவையைச் சேர்ந்த

ஆர்.எஃப்.பி.ஐ.ஓ. நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கணேஷ் சங்கர், துணைத் தலைவர் (தொழில்நுட்பம்) மணிஷ் பாப்னாவை அணுகினோம். “பொதுவாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறை என்றழைக்கப்பட்டாலும், இதில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று, சேவை அடிப்படையிலான நிறுவனம். வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, இந்தியாவில் இருந்தபடியே அவர்களது தேவைகளை கம்ப்யூட்டர் மூலம் பூர்த்தி செய்து தருகின்றன சேவை நிறுவனங்கள். மற்றொன்று, பிரத்தியேக சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள். தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி, கட்டுமானம், மீடியா என அனைத்துத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தேவையான சாஃப்ட்வேர்களை இவை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

`க்ளவுட்’ தொழில்நுட்பம்!

அதேசமயம், எங்களைப் போன்ற நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்களுக்கும் பொருத்தமான  சாஃப்ட்வேரை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். நிறுவனங்களின் பணிச் சுமையைக் குறைத்து, அவர்களது தொழில் மேம்பாட்டான திட்ட வரைவு, மேலாண்மையை எளிமைப்படுத்தல் உள்ளிட்ட வை இந்த சாஃப்ட்வேரில் அடங்கியிருக்கும். மேலும், `க்ளவுட்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, `ரெக்வெஸ்ட் ஃபார் புரபோசல்’ என்ற, பல்வேறு பரிந்துரைகள் கொண்ட சாஃப்ட்வேரை உருவாக்கியுள்ளோம். `ஆர்ட்டிஃபீஷியல் இண்டலிஜென்ஸ்’ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியும், சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.

கோவையில் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. எங்களது சாஃப்ட்வேரை மட்டும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 25 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் வேகம், 2020-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு உள்ளது. கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களின் தரம், நம்பகத்தன்மை, எளிதில் பயன்படுத்த உதவும் தன்மை உள்ளிட்டவை, இந்த துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளன.

மேலும், தற்போது வரும் இளம் பொறியாளர்களும் மிகுந்த திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர். கல்வி நிறுவனங்களும், மாணவர்களின் திறனை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. மூன்றாம் ஆண்டிலேயே தொழில்முறை பயிற்சி எனப்படும் இன்டர்ன்ஷிப்புக்கு மாணவர்

களை, மிகப் பிரபலமான நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கின்றன. இதுபோன்ற காரணங்கள், கோவையை சாஃப்ட்வேர் துறையின் மையமாக மாற்றி வருகின்றன” என்றனர் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x