Published : 27 Mar 2019 07:46 PM
Last Updated : 27 Mar 2019 07:46 PM

பள்ளி மாணவர்களிடம் வாக்களிப்பது குறித்து பெறப்படும் படிவம்: பெற்றோர் தரவுகளை திரட்டும் மோசடி- மே.17 இயக்கம் எதிர்ப்பு

பள்ளி மாணவர்களிடம் வாக்குமொழி உறுதிபத்திரம் வழங்கப்பட்டு பெற்றோர் உறவினர் வாக்காளர் அடையாள எண்கள் சேகரிக்கப்படுகிறது இதன்மூலம் மோசடி நடக்க வாய்ப்புள்ளது, கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது என மே.17 இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனைத்துப் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடத்திலும் ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா (Sankalph Pathra)  என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள அந்த பத்திரத்தில் நாங்கள் கண்டிப்பாக வாக்களிப்போம் என்று மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் கையெழுத்துப் பெற்று வரவேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அந்த படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்டுள்ள இப்பத்திரம் பெரும் மோசடியாகும். வாக்கு அளிப்பது என்பது ஜனநாயகம் மக்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கும் உரிமை. ஒருவன் யாருக்கு வாக்களிப்பது என்பதையும், வாக்களிப்பதா கூடாதா என்பதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அவர்களை கட்டாயப்படுத்தி உறுதிப் பத்திரம் பெறுவதென்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமான செயலாகும். இச்செயல்முறையை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இப்படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படுவதால் அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

பாஜகவை கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற வைப்பதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் வழங்குகிறதா? என்ற கேள்வியினை எழுப்ப வேண்டியிருக்கிறது. பெற்றோர்களே! உங்கள் வாக்குகள் பாஜகவிற்கு கள்ள வாக்குகளாக மாறுவதற்கான வாய்ப்பினை அவர்களுக்கு வழங்காதீர். இந்த படிவம் சட்ட விரோதமானது.

அப்படிவத்தினை பூர்த்தி செய்ய வலியுறுத்தி பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அதுவும் சட்ட விரோதமே. பள்ளி நிர்வாகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நோக்கி கேள்வி எழுப்புங்கள். தேர்தல் ஆணையமும், பள்ளி நிர்வாகங்களும் இப்படிவம் பெறும் செயல்முறையை நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு மே.17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x