

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா 3 நாள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கோவையில் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி வார்டுகள், 8 நகராட்சி தலைவர்கள், 7 பேரூராட்சி தலைவர்கள், 101 பேரூராட்சி வார்டுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 18–ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில், முதலாவதாக, வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதை முதல்வர் ஜெயலலிதா கடந்த 29–ம் தேதி வெளியிட்டார். கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார், நெல்லையில் புவனேஸ்வரி, தூத்துக்குடியில் அந்தோணி கிரேஸி ஆகியோர் களம் காண்கின்றனர்.
நெல்லை, கோவை
இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மேயர் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 12-ம் தேதி தொடங்கி, முதல்வர் ஜெயலலிதா 3 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
வரும் 12-ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் பிரச்சாரத்தை அவர் தொடங்குகிறார். பின்னர் திருநெல்வேலி மாநகராட்சியில் 14-ம் தேதியும், இறுதியாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் 15-ம் தேதியும் பிரச்சாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.