

மதுரையில் ரயில் தண்டவாளம் அருகே குண்டு வெடித்த சம்பவத்தில் ரவுடியின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மகாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது தாத்தா முத்து. இவர் நேற்று முன்தினம் வீட்டில் சேகரித்த குப்பைகளை அருகில் உள்ள போடி ரயில் தண்டவாளம் பகுதியில் கொட்டினார். இதில் இருந்து பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இது குறித்து முத்துவிடம் போலீ ஸார் விசாரித்தனர். அவரது பேரன் பிரவீன் குமார் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
தனிப்படை போலீஸ்
அவர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீஸார் அவரைத் தேடினர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
மதுரை நகர் காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர் சக்ரவர்த்தி உள்ளிட்ட தனிப்படை போலீஸார் பிரவீன் குமாரை தேடிவருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறிய தாவது: பிரவீன் குமார் சிறு வயதில் இருக்கும்போதே இவரைவிட்டு தந்தை பிரிந்து சென்றுள்ளார். பிரவீனின் சகோதரர் சென்னையில் ஆயுதப்படையில் போலீஸ்காரராகப் பணிபுரிகிறார். அவரது மாமா ஒருவரும் எஸ்.ஐ.யாக உள்ளார்.
ரவுடிகளுடன் தொடர்பு
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பிரவீன் குமாருக்கு மதுரையில் உள்ள சில ரவுடிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பிரபல ரவுடியான பிள்ளையார் கணேசன் என்பவரின் கூட்டாளியாக உள்ளார். கணேசனும் தலைமறைவாக உள்ளார். அவரது எதிரியை தாக்குவதற்கு வெடிகுண்டு பதுக்கி வைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மொபைல் போன் ஆய்வு
பிரவீன் குமாருக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதால் வெடிகுண்டு தயாரிக்கும் கும்பலுடன் பழக்கம் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தனது எதிரிகளைத் தாக்குவதற்காக சாக்குப் பையில் வெடிகுண்டை வைத்திருக்கிறார். அதை அறியாமல், அவரது தாத்தா எடுத்துச் சென்று குப்பையில் வீசியிருக் கிறார்.
பிரவீன் குமார் மொபைல் போனை ஆய்வு செய்து வருகிறோம், அவர் பிடிபட்டால் முழு உண்மை தெரியவரும் என்றார்.