Last Updated : 27 Mar, 2019 08:59 AM

 

Published : 27 Mar 2019 08:59 AM
Last Updated : 27 Mar 2019 08:59 AM

இரு திரைப்படங்களும் ஒரு எலெக்ட்ரிக் சைக்கிளும்...

அதிகரித்துவரும் பெட்ரோல் விலை, வாகன புகையால் ஏற்படும் காற்று மாசு, வாகனங்களின்  சப்தத்தால் உண்டாகும் ஒலி மாசு... உலகம் முழுவதும் நீடிக்கிறது இந்தப் பிரச்சினை. சரி, இதற்குத் தீர்வு என்ன? எலெக்ட்ரிக்  பைக்குகள். இந்தியாவில் இன்னும் இவை பிரபலமாகவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இவற்றின் தேவை அதிகமிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு குறைந்தசெலவில், அதிக மைலேஜ் அளிக்கும் எலெக்டிரிக் பை-சைக்கிளை உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர் பிரியதர்ஷன்(20). இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை உருவாக்க, அவருக்குத்  தூண்டுகோலாக இருந்தது இரு திரைப்படங்கள் என்பதுதான் ஆச்சரியம்.

“2014-ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துல தனுஷ் ஓட்டிட்டு வரும் ‘என்பீல்ட் மோஃபா’ மொபட்டைப் பார்த்துதான், இதுமாதிரி ஒரு வண்டிய சொந்தமா உருவாக்கணும்ங்கற ஆசை வந்துது. நான் பள்ளிக்குப்  போக வாங்கிக் கொடுத்த சைக்கிளையே, எலெக்டிரிக் சைக்கிளா மாத்த முடிவு செஞ்சேன். முதல்ல உருவாக்குன எலெக்ட்ரிக் சைக்கிள் சரியா வேலை செய்யலை. அதுக்கப்புறம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சரிசெய்யறமெக்கானிக் மகேந்திரன், சில யோசனைகளை கொடுத்தார். முதல்ல 30 வோல்ட் பேட்டரில ஓடுற சைக்கிளை  உருவாக்கினேன். அது அதிகபட்சம் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்துலதான் போகும்.

அந்த நேரத்துலதான் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படம் வந்தது. அதுல, எலெக்ட்ரானிக் சர்க்யூட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதன்படி,  லித்தியம்-அயன் பேட்டரியை சைக்கிளுக்குப் பயன்படுத்துனேன். இதனால்,  அதிக மைலேஜும், வேகமும் கிடைச்சுது. நாலு  வருஷமா படிப்படியா மேம்படுத்தி,  இப்போ 64 வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரில ஓடுற மாதிரி வடிவமைச்சிருக்கேன்” என்கிறார் கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை இயற்பியல் 2-ம் ஆண்டு பயின்று வரும் பிரியதர்ஷன்.

தனது வீடு அமைந்துள்ள சாய்பாபா காலனியில் இருந்து,  கவுண்டர் மில் பகுதியில் உள்ள கல்லூரிக்கு,  தானே உருவாக்கிய எலெக்ட்ரிக் சைக்கிளில்தான் தினமும் சென்று வருகிறார். கண்டுபிடிப்பின் தொடக்கத்தில் தோல்வி ஏற்பட்டாலும், பிரியதர்ஷனின் ஆர்வத்தை தெரிந்துகொண்ட பெற்றோர் கோமதி  நாராயணன்-சங்கீதா, அவரது கண்டுபிடிப்புக்கு ஊக்கமளித்து வருகின்றனர். அதேபோல, கல்லூரித் தாளாளர் வாசுகி, ரூ.15 ஆயிரம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். மேலும், கல்லூரி உதவியுடன், இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளார் பிரியதர்ஷன்.

70 கிலோமீட்டர் வேகம்!

இந்த சைக்கிளின் சிறப்பம்சங்கள் குறித்து பிரியதர்ஷனிடம் கேட்டபோது, “சந்தையில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளை விட,  குறைந்த செலவில், அதிக மைலேஜ் கிடைக்கிறது. அத்துடன்,  வேகமும் அதிகம். பின் சக்கரத்தில் சாதாரண பிரேக்குக்குப் பதில்,  மின்காந்த விசையால் இயங்கும் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறச் சக்கரத்தில் 2 டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும்,  3 விநாடிகளில் வாகனத்தை நிறுத்த முடியும். சைக்கிளின் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர்.

ஆட்டோமேடிக் சார்ஜ்!

 ஒருமுறை மின்சாரத்தை சார்ஜ் செய்தால்,  70 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அவ்வாறு ஒருமுறை சார்ஜ் செய்ய ரூ.3 மட்டுமே செலவாகிறது. சார்ஜ் செய்ய 3 முதல் 8 மணி நேரமாகும். 3 முதல் 7 ஆண்டுகள் வரை இதன் பேட்டரியைப் பயன்படுத்தலாம். சைக்கிள் இயங்கும்போதே, தன்னிச்சையாக பேட்டரி சார்ஜ் ஆகும் வசதியும் உள்ளது. இதன் காரணமாகவே அதிக மைலேஜ் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் சர்க்யூட்டில்  ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எமர்ஜென்சி ஸ்டாப் பட்டனைப் பயன்படுத்தி,  வாகனத்தை உடனடியாக நிறுத்தமுடியும்.  எலெக்டரிக் சைக்கிளை உருவாக்க இதுவரை ரூ.53 ஆயிரம் செலவாகியிருக்கிறது. இனிவரும் நாட்களில்,  தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது, மேலும் விலை குறையும். இது பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. பெட்ரோல் விலை உயர்வைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பிரியதர்ஷன்.

அறிவியல் மாதிரிகளை சந்தையில் விலைக்கு வாங்கி வந்து பள்ளி, கல்லூரிகளில் காட்சிப்படுத்தும் நிலையை மாற்றி, சுய சிந்தனையில் உருவாகும் சிறு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தால், மாற்றங்கள் நிகழும் என்பதற்கு பிரியதர்ஷன் ஓர் உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x