Published : 26 Mar 2019 01:09 PM
Last Updated : 26 Mar 2019 01:09 PM

சென்னை காவல் ஆணையர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

2009-ம் ஆண்டு நீதிமன்ற கலவரத்தில் உடைக்கப்பட்ட வழக்கறிஞர் காருக்கு  காவல்துறை நஷ்டஈடு செலுத்தாத காரணத்தால் காவல் ஆணையர் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை பிரச்சினையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே உயர் நீதிமன்றம் வந்த சுப்ரமணியம்சுவாமி மீது முட்டை வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் போலீஸார் உயர் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

வழக்கறிஞர் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டு உயர் நீதிமன்றமே போர்க்களமாக மாறியது. இதில் நீதிபதியே தாக்கப்பட்டார். தலைமை நீதிபதியின் நூலக அறையும் தாக்கப்பட்டது. பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் போலீஸார் தாக்குதலில் வழக்கறிஞர் ஜார்ஜ் கிரஹாம் என்பவரின் ஹோண்டா சிடி கார் அன்று சேதமடைந்தது. மறுநாள் அவர் காரை எடுக்க முடிந்தது.

இந்நிலையில் தனது காருக்கு ஏற்பட்ட சேதம், தினமும் நீதிமன்றத்திற்கு வந்துபோன செலவு, மன உளைச்சல் போன்றவற்றை ஈடு செய்ய நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அவருக்கு காவல்துறை ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அவருக்கான் நஷ்ட ஈட்டை வழங்காமல் காவல்துறை இழுத்தடித்து வந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் ஜார்ஜ் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை கணக்கில் எடுத்த நீதிமன்றம் நஷ்ட ஈடு மற்றும் 12 சதவீத வட்டி சேர்த்து ரூ.1 லட்சத்து 80ஆயிரத்தை கட்டாததால் அதற்கு ஈடாக காவல் ஆணையரின் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

காவல் ஆணையர் டயோட்டா கரோலா வாகனத்தை பயன்படுத்துகிறார். அது 2006-ம் ஆண்டு மாடல். அதன் விலை 12 லட்ச ரூபாய் ஆகும். காவல் ஆணையர் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிடுவது காவல்துறையில் மதிப்பிழப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே நீதிமன்ற ஊழியர்கள், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகம் சென்றதாகவும், அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததன்பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x