Published : 21 Mar 2019 09:50 AM
Last Updated : 21 Mar 2019 09:50 AM

நிற்பதுவே... நடப்பதுவே... பறப்பதுவே... இயற்கையின் தாய்மடியை பாதுகாப்போம்

ஆர்.கிருஷ்ணகுமார்/க.சக்திவேல்

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதா? மரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்துக்கும் சொந்தமானது இல்லையா? ஆனால், எல்லாவற்றையும் அழித்து, மனிதர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? மனித இனம் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும்  விலங்குகளையும், பறவைகளையும் அழித்துவிட்டு, காட்டைச் சுருக்கி சாதித்தது என்ன? இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்குள் எழுந்தாலும், வனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு எத்தனை பேருக்கு இருக்கிறது. உலக வன தினமான இன்றிலிருந்தாவது, வனத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டுமென்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

ஓவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் தேதி சர்வதேச  வன நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  2012-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் சர்வதேச வன நாள் கொண்டுவரப்பட்டு, பல நாடுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னொரு காலத்தில் அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில், ஆங்காங்கே ஊர்கள் இருந்த நிலை மாறி, தற்போது காடுகளைக் காண வேண்டுமெனில் வெகுதூரம் பயணிக்க வேண்டுமென்ற நிலையை உருவாக்கிவிட்டோம்.

உலகில் 8 இடங்கள் அரிதினும் அரிதான உயிர்ச்சூழல் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. நூற்றுக்கணக்கான, உலகில் வேறெங்கும் காணமுடியாத மரங்கள் இம்மலைத் தொடரில் உள்ளன. இந்த மலைத் தொடரும், வனப் பகுதிகளும் ஏராளமான பாலூட்டிகள், ஊர்வன, நீர், நில வாழ்வன, வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் என கணக்கிலடங்கா உயிரினங்களின் வாழ்வாதாரமாய்த் திகழ்கின்றன.

காடு திருத்தி நாடாக்கத் தொடங்கிய பிறகு, வனங்களின் பரப்பு குறைந்தது. குறிப்பாக,  வெள்ளையர் வருகைக்குப் பிறகு இது வேகமெடுத்தது. காட்டை அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கியதால், மரங்கள் அழிந்தது மட்டுமல்ல, அதைச் சார்ந்த உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வனத்தை அழிக்கும் காரணிகளாய் ஆக்கிரமிப்பு, மரங்களை வெட்டி கட்டிடங்களை உருவாக்குதல் மற்றும் வனத் தீ முக்கியக் காரணமாய் திகழ்கிறது.

“மனிதர்கள் இல்லா உலகில் பறவைகளும், விலங்குகளும் உயிர்வாழும். ஆனால், அவையில்லாத உலகில் நம்மால் ஒருபோதும் வாழ முடியாது” என்பார் பறவைக் காதலர் சலீம் அலி. பறவைகளும், விலங்குகளும் உயிர்வாழ மட்டுமின்றி, எதிர்காலச் சந்ததிக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்ல வேண்டுமெனில் காடுகளைக் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.

வனம் மற்றும் கல்வி!

“நடப்பாண்டு ‘வனம் மற்றும் கல்வி’ என்பதை கருப்பொருளாக கொண்டு சர்வதேச வன நாள் கொண்டாடப்பட உள்ளது” என்கிறார் கோவை மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ்.

“உலகில் உள்ள நிலப்பரப்பில் 4 பில்லியன் ஹெக்டேர் வனம் உள்ளது. உலகின் மிகப் பழமையான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலைக் காடுகள் இல்லாமல் போயிருந்தால், தென் இந்தியாவே பாலைவனமாக இருந்திருக்கும்.

வனம்தான் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மரங்கள் அதிக அளவிலான வளிமண்டல கார்பனை தன்னகத்தே சேர்த்து வைத்துள்ளது. ஒரு மரக்கன்று வளரும்போது,  வளிமண்டலத்தில் உள்ள கார்பனை ஒளிச்சேர்க்கை மூலம் கிரகித்து வைத்துக்கொள்கிறது. எனவே, வனத்தில் இருக்கும் மரங்கள் அனைத்தும் அதிக கார்பனைக்  கொண்டுள்ளன.

காட்டுத் தீயும், கார்பனும்...

காட்டுத் தீ ஏற்படும்போது மரங்கள் முற்றிலும் எரிந்து, அவை சேர்த்து வைத்துள்ள கார்பன் மீண்டும் வளிமண்டலத்துக்கே சென்றுவிடுகிறது. இந்த கார்பன், ஓசோன் படலத்தைப் பாதிக்கும். ஓசோன் படலம் பாதிப்படையும்போது புவி வெப்பம் அடைகிறது. எனவேதான், வனத்தையும், அங்குள்ள மரங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

காட்டுத் தீ இயற்கையா?

அண்மைக்காலமாக பரவும் காட்டுத் தீ குறித்து அவரிடம் கேட்டோம். “மின்னலினால் இயற்கையாகவே வனத்தில்  தீ உண்டாகிறது. ஆனாலும், பின்னர் மழை பொழிவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இயற்கையே அதை சரிசெய்து கொள்கிறது. பெரும்பாலும் மனிதர்களால்தான் காட்டுத் தீ ஏற்படுகிறது. இதனால், மரங்கள் சேகரித்து வைத்துள்ள கார்பனில், ஆண்டுதோறும் 20 சதவீதம் வளிமண்டலத்தை சென்றடைகிறது. புவிவெப்பமாதலில் காட்டுத் தீயும் பெரும் பங்கு வகிக்கிறது.

காட்டுத் தீயால் விலை மதிக்க முடியாத மரங்கள் அழிந்துவிடுகின்றன. சிறு உயிரினங்கள், தாவரங்கள் தீயில் கருகி மடிகின்றன. மண்ணின் ஈரப்பதம் மறைந்து, சத்தும் குறைகிறது. அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும்போது மண் அரிப்பு ஏற்படும். இதனால், மழை பெய்யும்போது மலைப் பகுதியில் உள்ள மண்,  சமதளப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்குச் சென்று நிரம்பும்.  காட்டுத் தீ ஏற்படும்போது நவீன உபகரணங்களைக்  கொண்டுசென்று தீயை அணைப்பதெல்லாம் இயலாத காரியம். தீ பிடித்த மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், புதர்களை அப்புறப்படுத்தல் என வன ஊழியர்கள் பாரம்பரிய முறைப்படிதான் தீயை அணைக்கின்றனர். எனவே, காட்டுத் தீயின்  விளைவுகளை அறிந்தால், யாரும்  தீ உருவாக காரணமாக இருக்கமாட்டார்கள்” என்றார்.

இயற்கையை நேசிப்போம்!

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் ஆண்டனி (எ)அபி(54). காடுகளில் சுற்றித் திரிந்து, வனம், விலங்குகள், பறவைகளைப் புகைப்படம் எடுப்பதுடன், பல்வேறு விவரங்களையும் சேகரிக்கிறார். அவரை சந்தித்தோம்:

“அப்பா முடியப்பன், வீட்டுல கீரி, புல் புல், குருவியெல்லாம் வளர்த்தாரு. எனக்கு 12 வயது இருக்கும்போது, டாப் சிலிப் காட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு. அதுல இருந்த, காடு, விலங்கு, பறவைகள்னு ஆர்வம் அதிகமாச்சு. இதனால், நண்பர்களோட வனப் பகுதிகளுக்குப் போனேன். தனியார் கம்பெனில வேலை செஞ்சப்பவும் சரி, அதுக்கப்புறம் சொந்தமா தையல் மிஷின் பழுதுபார்க்கறது, விக்கறதுனு இருந்தப்பவும் சரி, கொஞ்சம் மன அழுத்தம் இருந்தாலும், காட்டை நோக்கிப் போயிடுவேன்.  கணுவாய் தாண்டும்போதே, என்னோட மன அழுத்தமெல்லாம் காணாமல்போயிடும். ஆனைகட்டி, டாப் சிலிப், தெங்கு மரஹடா, பந்திப்பூர்னு காட்டை நாடிப் போனேன்.

பொதுவாகவே, மனிதர்களை ஈர்க்கும் சக்தி யானைகளுக்கு உண்டு. 2006-ல இருந்து யானைகளைப் பார்க்கறதுக்காகவே காட்டுக்குப் போனேன். யானைகள் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள்னு நிறைய படிச்சேன். 2017-ல ஒரு கேமரா வாங்கி, படமெடுக்கத்

தொடங்கினேன். யானைங்களை அடையாளம் தெரிஞ்சுக்கறதுக்காக, 10 வருஷத்துக்கு முன்னாடியே அதுங்களுக்கு பேர் வைக்கத் தொடங்கினேன். இப்ப ஃபேமஸான சின்னதம்பி, விநாயகனுக்கெல்லாம் நாங்க பேர் வெச்சோம். சின்னதம்பி, பெரியதம்பி, விநாயகர் அம்சம், மின்னல், சின்ன கொம்பன், பாட்டியம்மா, கூடுகொம்பன்னு பேர் வெச்சோம்.

பெரும்பாலும் தடாகம் பள்ளத்தாக்கு பகுதிக்கப் போய், யானைகளை படமெடுக்க ஆரம்பிச்சேன். நரசிபுரம் பகுதியில ஒரு யானை இறந்து கிடந்தது. அது மேல ஏறி குட்டி கதறிக்கிட்டிருந்தது. மனிதர்களைக் காட்டிலும், யானைக்கு பாசம் அதிகம்னு அப்ப தெரிஞ்சிக்கிட்டேன்.

இதே மாதிரி, பறவைகளையும் படமெடுக்கத் தொடங்கினேன். விசிறிவால் ஈ பிடிப்பான், புல் புல், கருந்தலைக் குருவி, டிக்கல்ஸ் ப்ளூ ப்ளை கேச்சர், காப்பர் ஸ்மித்  பேர்பெட்,   அரச வால் ஈ பிடிப்பான், வெள்ளைக்கண்ணி, கிருஷ்ணன் கழுகு, நீலகிரி ஈ பிடிப்பான், க்ரே ஹெட்டட் கேனரி ப்ளைகேச்சர்னு நிறைய பறவைகளைப் படமெடுத்தேன்.  அதேபோல, நிறைய பட்டாம்பூச்சிகளையும் படமெடுத்தேன். சிறந்த படத்துக்காக நிறைய பரிசு, விருதுகளை வாங்கியிருக்கேன்.

பொதுவா, இயற்கையை நேசிக்கறவங்க, தப்பு செய்யமாட்டாங்க அப்படீங்கறது என்னோட கருத்து. காட்டை அழிச்சிட்டோமுன்னா, இயற்கையோட முகமே மாறிடும். அதனால, வனத்தை, இயற்கையை பாதுகாக்கறது முக்கியம். இயற்கையை நேசித்தாலே, காடுகளைப் பாதுகாக்கனும்னு எண்ணம் வரும்” என்றார். படங்கள்: அபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x