

சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (14-ம் தேதி) 80 பேருந்துகளும், நாளை (15-ம்தேதி) 620 பேருந்துகளும், 16-ம் தேதி 655 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 5,676 பயணிகளும், நாளை 10,853 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் வசதியாக பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.