Published : 28 Mar 2019 10:08 AM
Last Updated : 28 Mar 2019 10:08 AM

பற்றி எரியுது குப்பைமேடு... டன் கணக்கில் சேருவதால் திகைக்கும் உள்ளாட்சி அமைப்புகள்!

ஒன்றுக்கும் உதவாத ஒன்றை `குப்பை’ என்று அலட்சியமாக குறிப்பிட்டு, அதைக் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், `குப்பை’ படுத்தும்பாடு தெரியுமா? ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் சேரும் குப்பையால், உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருவதை அறிவீர்களா? `சிறு துளி பெரு வெள்ளம்’போல, கொஞ்சம் கொஞ்சமாய் சேரும் குப்பை மலைபோல குவிந்து, அதனால் ஏற்படும் பிரச்சினைகளின் வீரியம் மிக அதிகம். குப்பையை அகற்றாவிட்டாலும் தொல்லை, ஒரு இடத்திலிருந்து அகற்றி, வேறொரு இடத்துக்குக் கொண்டுசென்று கொட்டினாலும் தொந்தரவு என இருதலைக் கொள்ளி எறும்பாய் திகைக்கின்றன மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள்!

உயர்ந்து வரும் மக்கள் தொகை, நுகர்வுக் கலாச்சார மாறுதல் என பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு நாளும் சேகரமாகும் குப்பையின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றையெல்லாம் கொட்டிவைக்கப்படும் குப்பைக் கிடங்கால் பல்வேறு பாதிப்புகள் எழுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், அவ்வப்போது குப்பைக் கிடங்குகளில் பற்றிக் கொள்ளும் தீ காரணமாகவும், சுகாதாரச் சீர்கேடு, காற்று மாசு என பாதிப்புகள் அதிகம். குறிப்பாய், தொழில் நகரங்கள் மிகுந்த கொங்கு மண்டலத்தில், குப்பைமேடு விவகாரம், பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்காக, வெள்ளலூரில் 650 ஏக்கரில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 250 ஏக்கருக்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது. தினமும் சுமார் 950 டன் குப்பை வீதம் கொட்டப்பட்டு, பல லட்சம் டன் குப்பை மலைபோல குவிந்துள்ளது.  சுகாதாரச் சீர்கேடு, துர்நாற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், குப்பையை அகற்றக் கோரி பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக, தேசிய பசுமைப் தீர்ப்பாயமும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி குப்பையில் பற்றிய தீ, 3 நாட்களாக கொளுந்து விட்டு எரிந்தது. பல மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 தீயணைப்பு வாகனங்களால் அணைக்க முடியாத நிலையில், ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. மூன்று நாட்களுக்குபிறகு ஓரளவுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தற்போதும் குப்பை மலையின் அடிப்பகுதியில் லேசான தீ இருந்துகொண்டே இருக்கிறது.

அடிக்கடி இங்கு தீப்பிடிப்பதும், சில நாட்கள் போராடி அதை அணைப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.  தீ விபத்துக்குக் காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தின்போது ஏற்பட்ட புகைமூட்டம் சூரியனையே மறைக்கும் அளவுக்கு இருந்தது. எதிரில் நிற்பவர்கூட தெரியாத அளவுக்குப் பரவிய புகைமூட்டத்தால்,  சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டனர்.  இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூரில் குப்பைக்கு சென்ற திட்டம்!

திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் சூழலில், தினமும் சுமார் 700 டன் சேகரமாகிறது. இவ்வளவு குப்பையை அப்புறப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறியது. ஆங்காங்கே உள்ள பாறைக் குழிகளில் குப்பை கொட்டப்பட்டு, குழிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், பாறைக்குழி பகுதிகளில் வசிப்பவர்களின் எதிர்ப்பால், குப்பை கொட்டுவது தடுக்கப்படுகிறது. எனினும், குப்பையைக் கொட்டியுள்ள பகுதிகளில், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. குப்பை கொட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தால், அப்பகுதி மக்கள் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்புத்  தெரிவிக்கின்றனர்.

“இடுவாய் அருகே ஒருங்கிணைந்த குப்பைக்கிடங்கு அமைக்க  இடம் தேர்வு செய்யப்பட்டும், தொடர் எதிர்ப்பால்  பல ஆண்டுகளாக அந்த திட்டமே குப்பைக்குச்  சென்றுவிட்டது” என வேதனைப்படுகின்றனர், மாநகராட்சி  முன்னாள் கவுன்சிலர்கள்.

நிரந்தரத் தீர்வை எதிர்நோக்கும் சேலம்?

சேலத்தில் உள்ள   60 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, எருமாபாளையம் குப்பைமேட்டில் கொட்டப்பட்டு வந்தது. அது நிரம்பியதையடுத்து, செட்டிச்சாவடிக்கு குப்பைக்கிடங்கை மாற்றினர். அங்கு சேகரமாகும் குப்பையை செங்கல் கட்டிபோல மாற்றி, மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்காக  விற்பனை செய்தனர். இந்த நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அந்தக் கிடங்கு மூடப்பட்டது.

தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும்,  தனித்தனியே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர். குப்பையைத் தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 400 டன்னுக்குமேல் குப்பை சேருகிறது. பல இடங்களில் சரிவர குப்பை அள்ளாததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை  பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பு.

ஈரோட்டில் காவிரிக் கரையில்...

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும் 300 டன் குப்பை, வெண்டிபாளையம் மற்றும் வைரபாளையத்தில், காவிரிக் கரையில் உள்ள கிடங்குகளில் கொட்டப்படுகிறது. வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் குறைந்த அளவு குப்பையை மட்டும் தரம் பிரித்து, அவற்றை உரமாக்கும் பணி நடக்கிறது. குப்பை தொடர்ந்து குவித்து வைக்கப்படுவதால், மலைபோலக் குவிந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் எழும் புகையால், சுற்றுப்புற மக்கள் மூச்சுத் திணறல், காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “குப்பையை முறையாக தரம் பிரித்து, அவற்றை உரமாக மாற்றாமல், குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். அதிலிருந்து எழும் புகையால்  கடும்  பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்யவும், கிடங்கில் உள்ள குப்பையை  தரம் பிரித்து, அதை முறையாகக் கையாளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

நாமக்கல்லில்  நிலத்தடி நீர் பாதிப்பு!

நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, கொசவம்பட்டி அன்னை சத்யா நகரில் நகராட்சி உரக் கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு பல்லாயிரம் டன் குப்பை குவிந்துள்ளது. குடியிருப்பு பகுதிக்கு நடுவே கிடங்கு அமைந்துள்ளதால்,  சுகாதாரச்  சீர்கேடு நிலவுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிடங்கின் சுற்றுச் சுவரையொட்டி குப்பை,  கழிவுகள் கொட்டப்படுகின்றன. பலத்த காற்று வீசும்போது, காற்றில் குப்பை பறந்து, அருகேயுள்ள குடியிருப்புகளில் விழுகிறது. எனவே, கிடங்கின் சுற்றுச் சுவரையொட்டி குப்பை கொட்டக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினாலும், நகராட்சி ஊழியர்கள் கேட்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கிடங்கில் தீப்பற்றும்போது, 2, 3 நாட்களுக்கு தொடர்ந்து எரிவதாகவும், அதிலிருந்து கிளம்பும் புகையால்  சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுகின்றன.

உரக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண, குப்பைக்  கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

மலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள், நகரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் கொட்டப்படுகிறது. தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இங்கு மலைபோல குப்பை தேங்கியுள்ளது. இங்கு சரியான வசதி இல்லாததால், மழைக்காலத்தில் குப்பை லாரிகள், குப்பை கொட்டும் தளத்துக்குள் செல்ல முடிவதில்லை.

இதனால், குப்பை தளத்தின் வெளிப்பகுதிலேயே குப்பையைக் கொட்டுகின்றனர். மழை நீரில் கழிவுகள் கலந்து,  சாலையிலேயே கழிவுநீர் பாய்ந்தோடி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, குப்பை கொட்டும் தளத்தை மூட வேண்டுமென தீட்டுக்கல் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குன்னூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை,  ஓட்டுப்பட்டறை பகுதியில் குடியிருப்பு அருகிலேயே கொட்டப்படுகிறது. குப்பை அதிகம் தேங்குவதால், நகராட்சி ஊழியர்கள் அடிக்கடி குப்பையை எரிக்கின்றனர். இதனால், ஓட்டுப்பட்டறை பகுதியில் கடும் சுகாதாரச்  சீர்கேடு ஏற்படுகிறது.கண் எரிச்சல், ஆஸ்துமா நோய்களுக்கு உட்படுகின்றனர். குப்பை எரிக்கப்படுவதால் எழும் கரும் புகை, குன்னூர், உபதலை, வெலிங்டன் பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

கூடலூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பை, அங்கு வனத்தையொட்டியுள்ள பகுதியில் கொட்டப்படுவதால், விலங்குகள் குப்பையை உண்ணும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து,  9-ம் மைல் பகுதியில், தனியார் இடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பையைக் கொட்டுகிறது. வனத்தின் நடுவில் இப்பகுதி அமைந்துள்ளால்,  யானைகள் அடிக்கடி இங்கு நுழைந்து விடுகின்றன. இதனால், நகராட்சி நிர்வாகம் மின் வேலி அமைத்து வருகிறது. இந்த குப்பை கொட்டும் தளம் சிறிய அளவில் உள்ளதால், சேகரிக்கப்படும் குப்பை உதகை மற்றும் குன்னூர் நகராட்சித் தளங்களிலும்  கொட்டப்படுகின்றன. இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x