

திமுக ஆட்சிக்கு வந்தால்தானே ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கமுடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, தண்டனை அளிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது அதிமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா என்று அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ''முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வராதவர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
அன்றைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, நீங்கள் சரியாகி வந்தால் ஆட்சியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். ஆனால் மக்கள் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கவில்லை. திமுகவைப் புறக்கணித்த அவர்கள், அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்தனர்.
அந்த வகையில், அப்பா எடுத்த அதே ஆயுதத்தை மகன் (ஸ்டாலின்) இன்றைக்குக் கையில் எடுத்திருக்கிறார். அது நடக்காது. ஸ்டாலின் அவரின் கட்சிக் கொள்கைகளைச் சொல்லலாம், அதன் தலைவர் பற்றிப் பேசலாம்.
ஜெயலலிதா பற்றிப் பேச ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்கப்படும். அதற்காகத்தான் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டிருகிறது'' என்றார் ஜெயக்குமார்.