Published : 10 Mar 2019 07:06 AM
Last Updated : 10 Mar 2019 07:06 AM

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க பாஜக, அதிமுக ஆட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

இந்தியாவின் பன்முகத்தன் மையைப் பாதுகாக்க மத்தியில் பாஜக ஆட்சியும் மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் வீழ்த்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சென்னை வியாசர்பாடியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:

மத்திய பாஜக அரசு, மக்கள் மீது சுமையை ஏற்றுவதால் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளித்தன. ஆனால், இந்த சம்பவத்தை பாஜக தனது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தி இத்தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கிறது.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இந்து வாக்கு வங்கியை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதே பாஜகவின் நோக்கமாகும். இந்த விஷயங்களை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளுடன், கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டால் பாஜக ஆட்சியின் உண்மை நிலை தெரிய வரும். காங்கிரஸ் ஆட்சியில் 109 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாஜக ஆட்சியில் 626 தாக்குதல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் 139 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாஜக ஆட்சியில் 483 பேர் இறந்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்கள் 12 பேர் இறந்தனர். இந்த ஆட்சியில் 210 பேர் இறந்துள்ளனர். எல்லைமீறல் நடவடிக்கைகள் அப்போது 566. இப்போது 5,593. இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமானால், மத்தியில் பாஜக அரசும், தமிழகத்தில் அதிமுக அரசும் இத்தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், முன்னாள் எம்.எல்.ஏ. பீமராவ், வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x