2-ம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது: புதிதாக விண்ணப்பித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்

2-ம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது: புதிதாக விண்ணப்பித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்
Updated on
1 min read

2-ம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது. புதிதாக விண்ணப்பித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை நாளை முதல் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பதற்காக இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. இதில், பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்காக மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெறும் என முன்னதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''2-ம் கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நாளை வெளியிட உள்ளது. இதில் புதிய வாக்காளர் படங்கள் அதில் இடம்பெறும். அவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த அடையாள அட்டையைக் காண்பித்து ஓட்டு போட முடியும். சென்னையில் 38 லட்சத்து 18 ஆயிரத்து 919 வாக்காளர்கள் உள்ள நிலையில் நாளை பட்டியல் வெளியான பிறகு வாக்காளர்கள் எண்ணிக்கை 75 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சிறப்பு முகாம்கள் மூலமாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை வரத் தாமதாகும் பட்சத்தில் ஓட்டுநர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

சென்னையில் 32 வேட்பாளர்களுக்கு மேல் நிற்பதால் ஓட்டு போடும் இயந்திரங்கள் 500க்கும் குறைவாக உள்ளன. விரைவில் மற்ற மாநிலங்களில் இருந்து கேட்டு பெறப்படும்''.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in