

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மணல் கடத்தல் வழக்குகளில், அந்த வழக்குகளில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மணல் திருட்டை தடுப்பதற்கு முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இணையதள வசதியுடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் லாரிகளை கண்காணிக்கவும், மணல் திருட்டை தடுக்கவும் கனிமவளச் சட்டப்படி எத்தனை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது?
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? பிற மாநிலங்களுக்கு மணல் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
அதில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு தமிழக பொதுப்பணித்துறை செயலர், வருவாய் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.