

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் அருகே வெம்பூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக கிராம மக்கள் வழங்கினர். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க இது ஒரு முயற்சி என கிராம மக்கள் தெரிவித்தனர்.
எட்டயபுரம் அருகே வெம்பூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 82 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக அ.கிருஷ்ணவேணி உள்ளார். ஏ.ராமலட்சுமி தலைமையில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், பள்ளிக்கு தேவையானவற்றை கிராம மக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
ரூ. 1 லட்சம் பொருட்கள்
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராமலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, பள்ளிக்கு தேவையானவை குறித்து எடுத்துக் கூறினார். கிராம மக்களும் தங்களால் இயன்ற பொருட்களை ஆர்வமுடன் வாங்க உதவினர். நாற்காலிகள், பீரோ, எழுது பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டன.
இவற்றை, மகளிர் தினமான நேற்று பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்கள் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக கல்வி சீர் பொருட்களை கைகளில் ஏந்திச் சென்றனர்.
பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஜி.சரளா, தலைமை ஆசிரியர் அ.கிருஷ்ண வேணி ஆகியோரிடம் பொருட்களை ஒப்படைத்தனர். ஆசிரியர்கள் எம்.கலையுடையார், டி.அருணாசல சுந்தரம், ஆர்.பத்மசெல்வி, அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் ஏ.லட்சுமி, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதிகாரி பெருமிதம்
வட்டார கல்வி அலுவலர் சரளா கூறும்போது, ``கிராம குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்வி சீர் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இவை மாணவ, மாணவிகளின் கல்விக்கு பேருதவியாக இருக்கும்” என்றார் அவர்.
வெம்பூர் கிராமத்தை சேர்ந்த சந்திரிகா பாலகருப்பசாமி கூறும்போது, ``மாணவ, மாணவிகளின் சேர்க்கை போதிய அளவு இல்லாததால், அரசு பள்ளிகள் பலவும் மூடப்படுகின்றன. இந்நிலைமை எங்கள் ஊர் பள்ளிக்கு வராதிருக்கவும், பள்ளியை மேம்படுத்தவும் முடிவெடுத்து கல்வி சீர் வழங்கி உள்ளோம். மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் அதிகம் சேர்க்க வைக்க இது ஒரு சிறிய முயற்சி” என்றார் அவர்.
குளிர் சாதன வசதி
பள்ளிக்கு, அரசு வழங்கிய கணினி தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு ஆசிரியர்கள் சார்பில் ரூ.32 ஆயிரத்துக்கு குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. கல்வி மேலாண்மை குழு தலைவர் ராமலட்சுமி தனது செலவில் பிரின்டர் வழங்கி உள்ளார்.