Last Updated : 13 Mar, 2019 08:18 AM

 

Published : 13 Mar 2019 08:18 AM
Last Updated : 13 Mar 2019 08:18 AM

தனித்து போட்டியிடுவது ஆசை..கூட்டணி அமைப்பது முடிவு: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கருத்து

வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்குவங்கியை நிரூபிக்க விரும்பினாலும், கட்சி விரும்புவதால் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:அதிமுக – பாஜக கூட்டணியை நீங்கள் கடுமையாக விமர்சிப்பதற்கு என்ன காரணம்?பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்வுரிமையை பறித்து சொந்த மண்ணிலே அகதிகளாக வாழச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று சோனியாகாந்தி குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி மாநில ஆளுநர் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இருப்பினும், அந்த7 தமிழர்களை விடுவிக்காமல் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது.

சுருங்கச் சொன்னால், மத்தியஅரசால் இந்திய மக்களுக்கு எள்அளவுகூட பயனில்லை. தமிழகமக்களுக்கு எள் முனை அளவுகூடபயனில்லை. மத்திய அரசுக்குஅடிமைபோல மாநில அரசுசெயல்படுகிறது. அதனால்தான், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக எதிர்க்கிறேன்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் நீண்டகாலமாக இருப்பதாகக் கூறுகிறார்களே?அந்த காலத்தில் இத்திட்டங்களால் வேலைவாய்ப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் நம்பியிருப்பார்கள். இவற்றால் ஏற்படும் பிரச்சினை பற்றி அப்போது விழிப்புணர்வு இல்லை. ஆனால், இத்திட்டங்களால் கனிமவளம் இல்லாமல் போகும். குடிநீர்ஆதாரம் பாழாகும், நிலம், நீர்,காற்று மாசுபடும் என்று இந்த தலைமுறைக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதால் முழுவீச்சில் எதிர்க்கிறார்கள்.

அதிமுக கூட்டணிக்கு போகமாட்டீர்கள். திமுக கூட்டணியில்தொகுதிகள் பங்கீடு முடிந்துவிட்டது. டிடிவி தினகரனிடம் நீங்கள் அதிக தொகுதிகள் கேட்டதால் தர முடியவில்லை என்றுஅவரும் கூறிவிட்டார். அப்படியானால் என்னதான் செய்வதாக திட்டம்?எனது தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், எங்கள் கட்சியின் பொதுக்குழு, “வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைத்தான் எனக்கு கொடுத்துள்ளது.

எனவே, அதிமுக – பாஜககூட்டணி தவிர, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி விரைவில் அறிவிப்போம். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

எந்த நம்பிக்கையில் தனித்துப் போட்டியிட விரும்புகிறீர்கள்?மத்திய, மாநில அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் திரண்டு வந்து எனது பேச்சைக் கேட்டனர். அதுமட்டுமல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக இளைஞர்கள் என் மீது காட்டிய அன்பும் ஆதரவுமே இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. இருப்பினும், இத்தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம்.

இவ்வாறு தி.வேல்முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x