பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் குறிப்பிடுவதா?-ஸ்டாலின் கண்டனம்

பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் குறிப்பிடுவதா?-ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்ற அடையாளங்களை அரசாணையில் வெளியிடுவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை வாங்கியும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்து, பெண்ணின் உறவினரைக் குற்றவாளிகள் தரப்பினர் தாக்கும்வரைச் சென்றதும் பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

இதனிடையே காவல்துறை எஸ்.பி. பாண்டியராஜன் குற்றவாளிகள் இவர்கள் நான்குபேர் மட்டுமே, நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புகார் அளித்த பெண்ணின் பெயரையோ, முகவரியையோ, எவ்வித அடையாளத்தையோ கூறக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸாரிடம்  மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே விசாரணையை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை உள்துறை சார்பில் அரசாணையாக வெளியானது. அதிலும் மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதைக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், ''பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சிபிஐ விசாரணைக்கான அரசாணையை அதிமுக அரசு வெளியிட்டிருக்கிறது.

இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in