Last Updated : 28 Mar, 2019 10:31 AM

 

Published : 28 Mar 2019 10:31 AM
Last Updated : 28 Mar 2019 10:31 AM

எம்ஜிஆர் - ஜெயலலிதா அனுதாபிகள் யார் பக்கம்? மல்லுக்கட்டும் அதிமுக- அமமுக

எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை நிரூபிக்க, திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக- அமமுக கட்சியினரிடைடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிமுகவினர் உண்மையான தொண்டர்களும், எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளும் தங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று அதிமுக- அமமுக ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் கூறி வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, அதை நிரூபிக்க இரு கட்சிகளும் மல்லுக்கட்டி வருகின்றன. இந்தப் போட்டி திருச்சி மக்களவைத் தொகுதியிலும் தீவிரமடைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என்று இரு கட்சிகளும் போட்டி போட்டு தொடர்ந்து நடத்தி வந்தன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று, எம்ஜிஆர்- ஜெயலலிதா அனுதாபிகள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் என்பதை நிரூபிக்க இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்காக அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் தினமும் 2 அல்லது 3 இடங்களில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களையும், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.

அதிமுக தரப்பில், மத்திய, மாநில அரசுகள் செய்த நலத் திட்டங்களைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அமமுக தரப்பில், ‘‘அதிமுக, திமுக கூட்டணிகள் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் இருவரும் வெளியூர்க் காரர்கள். எனவே, உள்ளூர் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்கள் கூறியது: ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதால்தான் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய அதிமுக அரசு செய்து வருகிறது. சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சிக்கு எதிராக செயல்படும் அமமுக-வுக்கு மக்களிடமோ, தொண்டர்களிடமோ செல்வாக்கு இல்லை. இதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். அதேபோல, உள்ளூர்வாசியாக இருந்தால்தான் மக்கள் பிரதிநிதியாக பணியாற்ற முடியும் என்ற பிரச்சாரமும் மக்களிடம் எடுபடாது என்றனர்.

இதுதொடர்பாக அமமுக வட்டாரங்கள் கூறியது: உண்மையான அதிமுக தொண்டர்கள் அமமுகவில்தான் உள்ளனர் என்பது ஆர்கே நகர் இடைத்தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு பயந்து ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி வரும் அதிமுக அரசு மீது மக்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களே கடும் அதிருப்தி, வெறுப்பில் உள்ளனர். எனவே, தேர்தல் வெற்றி மூலம் அமமுகவின் பலம் தொண்டர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x