

கடன் தொல்லை காரணமாக யூடியூபில் கள்ள நோட்டு தயாரிப்பது எப்படி என பார்த்து நோட்டடித்து விநியோகித்த எம்பிஏ பட்டதாரிப் பெண் சிக்கினார்.
கடலூர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் குமுதா. இவரிடம் பழம் வாங்கிய டிப் டாப் பெண் ஒருவர் ரூ.2000 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த வியாபாரிக்கு சந்தேகம் எழுந்தது.
ரூபாய் நோட்டு போலல்லாமல் பேப்பர்போல் உள்ளதே என சந்தேகப்பட்டு நோட்டைக் கொடுத்த பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்ப, அவர் பழத்தை வாங்காமல் வேகமாக நடையைக் கட்டியுள்ளார்.
இதையடுத்து பழ வியாபாரி சத்தம்போட, அந்தப் பெண் தப்பித்து ஓடியுள்ளார். தப்பி ஓடியவர் பேருந்தில் ஏறியுள்ளார். சிலர் போலீஸுக்குத் தகவல் கொடுக்க போலீஸார் உடனடியாக அங்கு வந்து அந்தப் பெண்ணைப் பிடித்தனர். அவரை விசாரித்தபோது பெயர் பரணிகுமாரி (32) என்பதும் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதும், எம்பிஏ வரை படித்துள்ள பட்டதாரிப் பெண் என்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீஸார் விரிவாக விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவலை அவர் தெரிவித்தார். கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. படிப்புக்கேற்ற வேலை இல்லை. பணத்தேவை ஏற்பட்டது. அதை ஈடுகட்ட என்ன செய்யலாம் என யோசித்தபோது கள்ள நோட்டு அடிக்கலாம் என தோன்றியது.
அதை எப்படி அடிப்பது என யூடியூபில் பார்த்தேன். ரூபாய் நோட்டை ஸ்கேன் எடுத்து கலர் பிரிண்ட் போடலாம், கலர் ஜெராக்ஸ் எடுத்து லாவகமாக ரூபாய் நோட்டைத் தயாரிக்கலாம் எனத் தெரிந்து கொண்டேன். குறைந்த முதலீடு என்பதால் ஸ்கேனிங், பிரிண்டிங் மெஷினை வாங்கினேன்.
அதில் 2000 ரூபாய், 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அடித்தேன். சில இடங்களில் மாற்றினேன். சிக்கிக்கொள்ளவில்லை. அதனால் தைரியம் பெற்று அதிக அளவில் அடித்தேன். தற்போது சிக்கிக் கொண்டேன் என பரணிகுமாரி தெரிவித்துள்ளார்.
பரணிகுமாரியைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ.69,700 மதிப்புள்ள 33 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள், 5 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டிகள், 6 எண்ணிக்கையிலான 200 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.