Published : 04 Mar 2019 05:51 PM
Last Updated : 04 Mar 2019 05:51 PM

திமுகவைக் கிண்டலடித்த எச்.ராஜா; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நாளை நமதே, நாற்பதும் நமதே என்பதா? என்று திமுகவைக் கிண்டலடித்த எச்.ராஜாவை நெட்டிசன்கள் தங்கள் பதிவுகளில் வறுத்தெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் 534 தொகுதிகள் என ட்விட்டரில் தவறாகக் குறிப்பிட்டதற்கும், ஒரு தொகுதி வைத்துக்கொண்டு நாளை நமதே நாற்பதும் நமதே என சொல்வதா என திமுகவை வம்பிழுத்துப் பதிவிட்டதற்காகவும் எச்.ராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. பாஜக கட்சியில் அதிரடியாகப் பேசக்கூடிய தலைவர். இவர்  அடிக்கடி ட்விட்டரில் ஏதாவது பதிவு செய்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதுபோல் இங்கும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தான் அதைப் பதிவிடவில்லை, தனது அட்மின் தவறாகப் பதிவிட்டார் என அந்தப் பதிவை நீக்கினார். அதுமுதல் எச்.ராஜா என்ன பதிவு போட்டாலும் நீங்கள் போட்டதா? அட்மின் போட்டதா? என கேட்டு விமர்சனம் செய்வது தொடர்கிறது.

இந்நிலையில் இன்று அவர் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் “இன்றைய காமெடி: நாடாளுமன்றத்தில் 1/534 தொகுதி வைத்துள்ள கட்சி நாடாளுமன்றம் நமதே, நாளை நமதே, 40-ம் நமதே என்று கூறியுள்ளது தான்” என பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவின் கீழ் நெட்டிசன்கள் அவரைக் கிண்டலடித்துள்ளனர். முதலில் இந்தியா முழுவதும் மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் 543, ஆனால் எச்.ராஜா 534 என தவறாகப் பதிவிட்டுள்ளார். அதைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

சிலர் எச்.ராஜா சாரணர் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 54 வாக்குகள் பெற்று சாதாரண நபரிடம் தோல்வியுற்றதைக் குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளனர்.

நெட்டிசன்கள் கிண்டல் பதிவு:

கீர்த்திராஜன் என்பவர் பதிவில், “சாரணர் தேர்தலில் அண்ணன் செய்த சாதனை முன்னாடி இது ஒண்ணும் பெரிய காமெடி இல்லை” என பதிவிட்டுள்ளார்.

ஜோக்கர் என்பவர் பதிவில்: “பல தேர்தல்ல வெற்றியை மட்டுமே பார்த்தவர் சொல்றாரு.. கேட்டுக்கோங்க ஜனங்களே” என கிண்டலடித்துள்ளார்.

மணிவண்ணன் என்பவர் பதிவில்,  “தமிழ்நாட்ல 0/234 எடுத்திருக்கும் கட்சி,தமிழகத்தை ஆள்வது செம காமெடி” என பதிவிட்டுள்ளார்.

ராகவேந்திரன் என்பவர் பதிவில் “54 ஓட்டு வாங்கிட்டு பேசற பேச்ச பாரு” என கேட்டுள்ளார்.

ஆனந்தராஜ் என்பவர், “தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதவர்கள் ஆட்சியைப் பிடிப்போம் சொல்வதும் காமெடி தான்” என தெரிவித்துள்ளார்.

ராக்கி என்பவர், “அதே கட்சி தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40/40 வென்று எதிர்கட்சிகளை காலி செய்தது என்று தமிழ் நாட்டில் 2016 தேர்தலில் ஒரு தொகுதி கூட வெல்லாத  0/234  தொகுதி வைத்துள்ள கட்சிக்கு நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்” என பதிலளித்துள்ளார்.

ஜான், “மொக்க காமெடி; தமிழ்நாட்டில் நோட்டாவிடம் போட்டி போடும் கட்சி தாமரை மலரும் சொல்லுது.   *52 ஒட்டு ” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சாமி, “0/234 இருந்துகிட்டு தாமரை மலரும்னு சொல்றதை விடவா பெரிய காமெடி இருக்கப் போகுது” என்று பதிவிடடுள்ளார். 

சுதர்சன் என்பவர் பதிவில், “சாரணர் இயக்க தேர்தல்தான் கண்ணுக்கு முன்னாடி வந்து போகுது” என பதிவிட்டுள்ளார்.

குடந்தை பாலன் என்பவர் தன் பதிவில், “ஒரு காலத்தில் (1984) 2 MP மட்டுமே வைத்திருந்த பாஜகவை சார்ந்த நீங்கள் இப்போதைய 1 எம்பியை வைத்திருக்கும் கட்சியை குறை கூறுவது ஏற்புடையதா? என பதிவிட்டுள்ளார்.

ஷேக் அமீர் என்பவர் தன் பதிவில், “நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையே சரியா சொல்ல தெரியல. இது தான் பெரிய காமெடி. இப்படி இருக்கும் போது தாமரை  சூப்பரா மலரும்” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பலரும் விமர்சித்தாலும், 543 என்கிற சரியான எண்ணிக்கையை மாற்றாமல் 534 என்கிற எண்ணிக்கையையே வைத்துள்ளார். அதேபோன்று 1 எம்.பி. தொகுதி வைத்துள்ள கட்சி தமிழகத்தில் பாமகவும், பாஜகவும் மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x