

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சா உசுரு போயிடும்! செயலற்றுப்போன விழிப்புணர்வுத் திட்டங்கள்
அருகே 10 குழந்தைகளின் தாய், 11-வது பிரசவத்தில் மரணமடைந்த சோகச் சம்பவத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்தால் இறந்துவிடுவோம் என அவரும், அவரது கணவரும் அச்சமடைந்ததால் விபரீதம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராம துணை சுகாதார நிலையத்தின் பின்புறம் வசிப்பவர் மணிகண்டன் (35). இவரது மனைவி, சித்ரா (34). இவர்களுக்கு 10 குழந்தைகள் உள்ளனர். 11வது முறையாக கர்ப்பமடைந்த சித்ரா, பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது அவரும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்தனர்.
தாய் இறந்த துக்கம் தெரியாமல், அவரது மற்ற குழந்தைகள், நேற்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தன. ஒன்றரை வயது கடைசிக் குழந்தை மாரீஸ்வரி இன்னும் புட்டிப்பால் கூட மறக்கவில்லை. இரண்டாவது குழந்தை சத்தியலட்சுமி, 9-ம் வகுப்பு படிக்கிறார். மற்ற குழந்தைகள், ஏழாவது, ஆறாவது, ஐந்தாவது, மூன்றாவது வகுப்புகள் படிக்கின்றன. மூத்த மகன் முத்தமிழன் (15) பத்தாம் வகுப்பை தொடராமல் தந்தையுடன் தம்பி, தங்கைகளைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல தொடங்கிவிட்டார்.
சித்ராவின் குழந்தை களை தற்போது அவரது தாயும், மாமியாரும் கவனித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு வயதா கவிட்டதால் 10 குழந்தை களையும் பராமரிக்க முடியவில்லை. மணிகண்டன், அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில்தான் வசிக்கிறார். அந்த வீடும் சேதமடைந்துள்ளதால், அருகே மற்றொரு குடிசை போட்டு அந்த வீட்டிலும் வசிக்கின்றனர்.
தீவிர விழிப்புணர்வு தேவை
தற்போது ஆண்கள், பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு நவீன வலியில்லாத சிகிச்சை முறைகள் வந்துள்ளன. கிராம சுகாதார செவிலியர்கள், இந்த சிகிச்சை முறை கள் பற்றி, கிராமப்புற பெண்கள், ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சித்ராவின் மரணம் சுகாதாரத் துறையின் விழிப்புணர்வுத் திட்டங்கள் கிராமங்களை குறிப்பாக, துணை சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள வீட்டைக் கூட சென்றடையவில்லை என்பதற்கு ஒரு உதாரணம். கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற ஆண், பெண் குடும்பக்கட்டுப்பாடு செய்ய அஞ்சுவதால் தாய், சேய் பிரசவ மரணம் நிகழ்கிறது. இதைத் தடுக்க செயலற்று கிடக்கும் குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாரு மேலயும் குத்தமில்ல...
சித்ராவின் மாமியார் பழனியம்மாள் கூறும்போது, ‘யாரு மேலயும் குத்தமில்ல, அந்த பிள்ள காய்ச்சல், தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிட மாட்டா..! ஊசி போட பயம். மருத்துவமனைக்குப் போக பயம்.. சின்னப்புள்ள போல அடம்பிடிப்பா. தடுப்பூசி கூட போடலன்னா பார்த்துக்கோங்க...
குடும்பக்கட்டுப்பாடு செஞ்சா உசுரு போயிடும், பிள்ளைங்கள யாரு காப்பாத்துவாங்க? என்பா, அவதான் பயப்படுறா. என் மகனை, நீயாவது செஞ்சுக்கடா.. என்பேன். அவனும் மாட்டேன்னுட்டான். குடும்பக் கட்டுப்பாடு செஞ்சா, பின்னாடி வேலைக்கு போவ தெம்பு இருக்காது. பொம்புள்ளை செஞ்சா பாதிக்காதுனு சொல்லி, அவள போகச் சொல்வான். அவளும் கடைசி வரைக்கும் போவல. பிள்ளைங்களத்தான் பெத்தாங்க.. தவிர, அவங்க உடம்ப பார்த்துக்கல. இப்பம், அவ பயந்தமாதிரியே போய்ச் சேர்ந்துட்டா..! பிள்ளைங்கள நினைச்சாத்தான் பாவமாக இருக்கு. 10 பேருக்கும் தலைக்கு தேய்க்க எண்ணெய், டீ, பன்னு வாங்கிக் கொடுக்க கூட வழியில்லை. கடவுள்தான், இரக்கப்படணும். ஒன்னு அரசாங்கம் உதவணும். இல்லாட்டி யாராவது உதவினாத்தான் குழந்தைகளைக் காப்பாத்த முடியும். என்றார்.