Published : 10 Mar 2019 08:47 PM
Last Updated : 10 Mar 2019 08:47 PM

இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: ஒப்பந்தம் கையெழுத்து

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தம் இன்று கையெழுத்தானது.

அதிமுக கூட்டணியில், தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவும் இதை விரும்பியதால், அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். 4 மக்களவை தொகுதி  தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், இழுபறி நிலை நீடித்து வந்தது.

ஆனால்  அதிமுக  4 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என உறுதியாக கூறியது. இந்தநிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணிகுறித்து நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் அது தொடர்பாக துரைமுருகன் அளித்த பேட்டியும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்திய திமுக பொருளாளர் துரைமுருகனின் செயலுக்கு தேமுதிக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த இழுபறிக்கு இடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்தது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உடன் பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x