Last Updated : 13 Mar, 2019 05:14 PM

 

Published : 13 Mar 2019 05:14 PM
Last Updated : 13 Mar 2019 05:14 PM

ராபர்ட் வதேராவை மட்டுமல்ல மோடியையும் விசாரிக்க வேண்டும்: கேள்விக்குப் பதில் அளிக்க மோடிக்கு துணிச்சல் இருக்கிறதா?- ராகுல் காந்தி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்  ராபர்ட் வதேராவையும் விசாரிக்க வேண்டும், ரபேஃல் ஊழலில் பிரதமர் மோடியையும விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று சென்னை வந்திருந்தார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி சளைக்காமல் பதில் அளித்தார்.

அப்போது, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்துவதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு மாணவி கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில்:

ராபர்ட் வதேரா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய முதல் மனிதர் நான்தான். ஒவ்வொருவரையும் விசாரிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. ஒவ்வொருவர் மீதும் சட்டம் சரியாகச் செயல்பட வேண்டும். தனிப்பட்ட ஒருநபருக்கு வேறு ஒன்றாக இருக்கக்கூடாது. ராபர்ட் வதேராவை விசாரிக்கும் நேரத்தில் ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் தொடர்புடைய பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும்.

மோடி ஒரு ஊழல்வாதி. ரஃபேல் தொடர்பான அரசு ஆவணங்களில் பிரதமரின் பெயர் இடம் பெற்றுள்ளது. ரஃபேல் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் டசால்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் மோடி நேரடியாக ஈடுபட்டுள்ளார். ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும், அது ராபர்ட் வதேராவாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி.

பிரதமர் மோடியிடம் இதுபோன்று கேள்வி கேட்க எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்வியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மோடியிடம் கேள்வி கேட்டிருக்கிறீக்களா?

3 ஆயிரம் மாணவிகள் முன், நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இருக்கிறதா. எத்தனை முறை இதுபோன்று பிரதமர் மோடி மாணவிகள் மத்தியில் நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். இவ்வாறு திறந்தவெளியில் நின்று யாராவது கேட்கும் எந்தக் கேள்விக்கும் மோடி பதில் அளித்து பார்த்திருக்கிறீர்களா? எதற்காக மோடி கேள்விகளுக்குப் பயந்து மறைகிறார்.

நாக்பூரில் இருந்து செயல்படும் அமைப்பும்(ஆர்எஸ்எஸ்), பாஜகவும் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் கபளீகரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்" என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு தீயைப் பற்றி எரிய வைத்து இருக்கிறது. தீவிரவாதத்தை ராஜதந்திரமாக கையாளத் தெரியவில்லை. பிரதமராகப் பதவியேற்றவுடன் மோடி, பிடிபி கட்சியுடன் கூட்டணி வைத்து  மிகப்பெரிய தவறு செய்தார். இன்று மோடியின் ஒவ்வொரு கொள்கையும் காஷ்மீரில் நெருப்பைப் பற்றவைத்துள்ளது. அவரின் கொள்கைகள் அனைத்தும் இந்தியாவில் எளிதாக தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நிகழ்த்த துணை போகிறது" என ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x