

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackRahul #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.
வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி முதன் முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.
தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக்கப்பட்டன. ராகுல் காந்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை மசூத் ஜி என்று கூறியதையும், பாலாகோட் தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்டதையும் கேலிச்சித்திரமாக வெளியிட்டு இந்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளது.
அதேவேளையில், #VanakkamRahulGandhi என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகிவருகிறது. இந்திய ட்ரெண்ட் மட்டுமல்லாமல் சென்னை ட்ரெண்டிங்கிலும் #GoBackRahul ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் பிரம்மாண்ட ஏற்பாடு:
தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.