Published : 26 Sep 2014 10:30 AM
Last Updated : 26 Sep 2014 10:30 AM

முத்திரை கட்டண மோசடி: மு.க.அழகிரி மனைவி மீது புகார் - விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி மீது மதுரை காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே பாலவாகம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.நடராஜன் (66) என்பவர் நேற்று மாலை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரைச் சந்தித்து அளித்த புகார் மனு:

மதுரை பைபாஸ் ரோட்டில் எனது சகோதரர் கணேசன் தலைமை வகித்து நடத்தி வந்த விநாயகா பாடி பில்டிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இருந்து வந்தேன். 2009-வது வருடம் என்னை சொந்த ஊரிலுள்ள சொத்துகளை பராமரிப்பதற்காக கணேசன் அங்கு அனுப்பிவிட்டார். அதன்பின் அவர் இங்குள்ள சில சொத்துகளை வில்லங்க விற்கிரயம் செய்ய ஆரம்பித்தது தெரியவந்ததால் எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. எனவே விநாயகா பாடி பில்டிங் நிறுவனமும், அதைச் சார்ந்த சொத்துகளும் எனக்கும், கணேசனுக்கும் உள்ள கூட்டு சொத்து என அறிவிப்பு வெளியிட்டேன்.

இந்நிலையில் 11.3.2010 அன்று மதுரை பொன்மேனியிலுள்ள 1.52 ஏக்கர் நிலத்தை எனது அனுமதியில்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அவர்களுடைய தயா பார்க்குக்கு கிரைய விற்பனை செய்துள்ளார். இந்த சொத்து ரூ.22.5 கோடிக்கு விற்கப்பட்டும், ரூ.2.5 கோடிக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாம்ப் வாங்கி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முத்திரை கட்டண மோசடி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பையும், உடன் பிறந்த சகோதரரான எனக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. எனவே என்னைத் திட்டமிட்டு ஏமாற்றிய சகோதரர் கணேசன், தயா பார்க் உரிமையாளர் காந்தி அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மதுரை காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x