

சின்னம் தொடர்பான கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கிண்டல் செய்ய அதற்கு கமல்ஹாசனும் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், கமலின் பதிலை முன்வைத்து அவரை ட்விட்டரில் விளாசியிருக்கிறார் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா.
இது தொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
என்ன சொன்னார் பொன்னார்?
முன்னதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "பேட்டரி லைட் கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்தாவது கட்சியைக் கண்டுபிடிக்கட்டும்" என்று கூறியிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டி கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு கமல், "எந்தக் கட்சி என்று சொல்லவில்லை என்றால், அவர்கள் கட்சி என்று நினைக்க வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே நோட்டாவில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தக் கட்சியை தேடித்தான் கண்டுபிடிக்கணும். அதற்கு இந்த டார்ச் பயன்படும். ஏனென்றால் மக்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நோட்டாவில் மிச்சமிருக்கும் கட்சியை வெளியே அனுப்புவதற்கு. அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்" என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில்தான் கமல்ஹாசன் கருத்துக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்திருக்கிறார்.
கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்