

தென் மாவட்ட அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, திண்டுக்கல் சி. சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் யதார்த்த மற்றும் உளறல் பேச்சுகள் தேர்தல் களத்தை கலகலப்பாக்கி வருகின்றன.
மதுரை செல்லூரைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ராஜு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அதிமுக கட்சிப் பொறுப்புகளிலும், ஆட்சிப் பொறுப்பிலும் முக்கிய நபர்களாக உள்ளனர்.
இதில் செல்லூர் கே.ராஜூ ஆரம்பகாலத்தில் கட்சிப் பொதுக்கூட்டம், அரசு விழாக்களைத் தவிர வாய் திறக்கவே மாட்டார். கட்சிப் போராட்டங்களில் பிரம்மாண்டக் கூட்டத்தை திரட்டி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிப் பொதுக்கூட்டம் மேடைகளில் ஆரம்பித்து, தற்போது தேர்தல் பிரச்சாரம் வரை இவரது அன்றாட பேச்சுகள், நடவடிக்கைகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க அவர் தெர்மாகோலை மிதக்க விட்ட நிகழ்வு உலகெங்கும் தமிழர்களிடையே நகைப்புக்குரிய விஷயமாக வைரலானது. மதுரையை சிட்னியாக்குவேன் என்றார். ஒருபுறம் இவரது பேச்சுகள், நடவடிக்கைகள் அங்கத நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டாலும் மறுபுறம் கட்சியிலும், பொது மக்களிடமும் அதிக கவனம் பெற்று ஸ்டார் பேச்சாளர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
அவரது பேச்சை ரசிக்க தொண்டர்கள் ஆர்வமாக திரள்கின்றனர்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த ஆண்டு பால் கலப்படம் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை பேச்சு முதல் மோடியை டாடி என பேசியது வரை சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சுகள் வைரலானது. மோடியை டாடி என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. சோனியாகாந்தியை அன்னை சோனியா என்றுதானே அழைக்கிறார்கள் என அவர் யதார்த்தமாக விளக்கமும் அளிக்கத் தவறவில்லை.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும், மூத்த அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் முன்பு கட்சியின் பொருளாளராக கறாரான நபராகத்தான் இருந்தார்.
ஆனால், கூட்டத்தில் பேசியபோது தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று சொன்னதில் ஆரம்பித்து நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் முன்னிலையில் ‘பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள்’ என்று பேசியது வரை அவரது தொடர் உளறல்கள், அரசியலில் அவர் ஓய்வுபெறும் கட்டத்தை அடைந்து விட்டாரா என தொண்டர்களை நினைக்க வைத்தது.
அமைச்சர்களின் இந்த பேச்சுகள் பொதுவெளியில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும், இதற்காகத்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர்களை ராணுவக் கட்டுப்பாட்டோடு செய்தியாளர்களிடம் வாய் திறக்க விடாமல் வைத்திருந்தாரோ என்று எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். ஆனால், இவையெல்லாம் தேர்தலில் எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது முடிவுகளின் போதுதான் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘திமுக தலைவர் ஸ்டாலினே மதுரையில் பேசியபோது, பிரதமர் சோனியா காந்தி என்றார்.
ஜப்பான் நாட்டின் துணை முதல்வராக இருந்தபோது என அவரது உளறல் வீடி யோக்கள் வைரலாக உலா வருகின்றன. பொதுவெளியில் இப்படி தலைவர்கள் தடுமாறு வது முன் பிருந்தே நடந்துள்ளது.
ஆனால், அப்போது தகவல் தொழில்நுட்பம் இல்லாததால் இப்போதுபோல வைரலாகவில்லை. ஆனால், இதை வைத்து மக்களின் மன வோட்டத்தை தீர்மானிக்க முடியாது.’’ என்றனர்.