Published : 06 Mar 2019 02:42 PM
Last Updated : 06 Mar 2019 02:42 PM

வரும் 13ம் தேதி தமிழகம் வரும் ராகுல்காந்தி: தொண்டர்கள் திரள கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில், கட்சித் தொண்டர்கள் திரள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகளின் தொகுதி பங்கீடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. திமுக தலைவர் மறைந்த கருணாநிதி எத்தகைய அணுகுமுறையை கூட்டணி கட்சிகளிடம் பின்பற்றினாரோ, அதைப்போல கால சூழலுக்கேற்ப பரந்த மனப்பான்மையோடு அரவணைக்கும் போக்கோடு தொகுதி பங்கீட்டை நியாயமான முறையில் அற்புதமாக செய்து முடித்திருக்கிற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் லட்சோபலட்சம் தொண்டர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி கொள்கைக் கூட்டணி. அதிமுக கூட்டணி பேரங்களின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி. நேற்று வரை ஊழல் சேற்றை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் அள்ளி வீசிக் கொண்டிருந்த கட்சிகள், பேரத்தின் அடிப்படையில் இன்று கூட்டணி அமைத்திருக்கின்றன. எந்த முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய கட்சியோடு கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கூட்டணி அமைத்து தமிழகத்திற்கே அதிமுக தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழக மக்களின் வெறுப்பை நிரம்ப சம்பாதித்திருக்கிற பாஜகவோடு அதிமுக கைகோர்த்திருக்கிறது. பாஜகவோடு கூட்டணி அமைக்க தயக்கத்தோடு இருந்த அதிமுக பாஜக அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து கூட்டணியில் சேர வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிற அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்து மக்கள் பாடம் புகட்ட இருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 13 ஆம் தேதி புதன்கிழமை கன்னியாகுமரியில் பிற்பகல் 2 மணியளவில் வருகை புரிகிறார். அவர் பங்கேற்கிற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்தியாவின் தென்கோடியில் அமைந்திருக்கிற கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்க இருக்கிற பிரச்சாரம் நாடு முழுவதும் எதிரொலிக்கப் போகிறது. தேசியளவில் ஏற்படுகிற மாற்றத்தில் தமிழகம் முன்னணி பங்கு வகிக்கிற வகையில் கன்னியாகுமரி கூட்டம் அமையப் போகிறது.

கடந்தகால தேர்தல் வரலாற்றின்படி காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத் தான் மக்கள் ஆதரித்து, வாக்களித்திருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் பங்கேற்கிற திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமா ? மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுபட வேண்டுமா ? வளர்ச்சி வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தலாக வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.

ராகுல்காந்தி கன்னியாகுமரிக்கு வருகை புரிகிறார். காமராஜரை எந்த கன்னியாகுமரி உயர்த்தி பிடித்ததோ, அங்கே இந்தியாவின் எழுச்சித் தலைவர் ராகுல்காந்தி வருகைபுரிய இருக்கிறார். தேசியளவில் நரேந்திர மோடியை வீழ்த்தப் போகிற மாவீரனாக ராகுல்காந்தி நாடு முழுவதும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தேசியளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர் தலைமையில் அணி திரண்டு நிற்கின்றன. ராகுல்காந்தியை பிரதமராக முன்மொழிந்த திமுக  உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பீடுநடை போட ஆரம்பித்திருக்கிறது.

எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் கன்னியாகுமரியை நோக்கி அணிஅணியாக வாருங்கள், அலை அலையாக அணிதிரண்டு வாருங்கள். ராகுல்காந்தி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சி தலைவர்களின் சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வரும்படி உங்களில் ஒருவனாக, தோழனாக, நண்பனாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அன்போடு அழைக்கிறேன்" என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x