Published : 07 Mar 2019 11:45 AM
Last Updated : 07 Mar 2019 11:45 AM

ரூபாய் 2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகையாக வழங்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால் தற்போது  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த தொகையை வழங்காமல், அனைத்து குடும்பத்துக்கும் இந்த தொகையை வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தொகையை வழங்கவும், இதுதொடர்பான நிபந்தனைகளை பின்பற்றவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது தேர்தல் முடிந்தபிறகு இந்த தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "ஏழைகளுக்கு  உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மனுதாரர் எதிர்க்கவில்லை. இந்த திட்டத்துக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையைத்தான் எதிர்க்கிறோம்.

முதலில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை என அரசாணை பிறப்பித்துவிட்டு, தற்போது தேர்தல் ஆதாயத்துக்காக சில பகுதிகளை அரசாணையில் சேர்த்துள்ளது. ஏழை, பணக்காரர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சகட்டுமேனிக்கு இந்த தொகையை வழங்க திட்டமிட்டுள்ளனர்" என்றார்.

அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசாணை போலியானது. அந்த அரசாணையில் ஏதோ தில்லுமுல்லு செய்துள்ளனர். அந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்.

தற்போது பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் மட்டுமே  பெறப்பட்டுள்ள நிலையில், யாருக்கு உதவித்தொகை வழங்குவது என்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும்" என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறப்போகும் பயனாளிகள் குறித்த விவரங்களை அரசு தரப்பும், அதேபோல இந்த வழக்கு தொடர்பான கூடுதல்  ஆவணங்களையும், போலியானது எனக் கூறப்படும் அரசாணை குறித்த விவரங்களை மனுதாரர் தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சரியான கணக்கெடுப்புகளின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு தமிழக அரசு 2000 ரூபாய் சிறப்பு பண உதவி வழங்குவதால் அதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x