Published : 09 Mar 2019 02:59 PM
Last Updated : 09 Mar 2019 02:59 PM

தலைமைச் செயலகத்தில் அதிமுக கொடியை ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை: இரா.முத்தரசன் விமர்சனம்

போகிற போக்கில், தலைமைச் செயலகத்தில் பறந்து கொண்டிருக்கும், தேசிய கொடியை இறக்கி விட்டு, அதிமுக கட்சி கொடியை ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகத்தை கட்சியின் தலைமை அலுவலகமாக, அதிமுக செயல்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கின்றது.

தங்களது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கான இடமாக தலைமைச் செயலகத்தை முதல்வரும், துணை முதல்வரும் பயன்படுத்தி, அப்பட்டமாக அத்துமீறி நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசின் தயவு இருப்பதால் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவரும் நம்மை கேள்வி கேட்க இயலாது என்ற நிலைக்கு முதல்வர் சென்றுவிட்டார் என எண்ணத் தோன்றுகிறது.

போகிற போக்கில், தலைமைச் செயலகத்தில் பறந்து கொண்டிருக்கும், தேசிய கொடியை இறக்கி விட்டு, அதிமுக கட்சி கொடியை ஏற்றினாலும் ஆச்சிரயப்படுவதிற்கில்லை. அந்த அளவுக்கு அத்துமீறும் நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.

முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஜனநாயக நெறிமுறையின் படியும், சட்டத்திற்குட்பட்டதான ஆட்சியாகவும் நடைபெற வலியுறுத்துகின்றோம்" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.        

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x