Published : 25 Sep 2014 01:51 PM
Last Updated : 25 Sep 2014 01:51 PM

காலியாக உள்ள இடங்களை நிரப்ப கூட்டுறவுச் சங்கங்களுக்கு அக்டோபர் 6-ல் இடைத் தேர்தல்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங் களுக்கு ஐந்து நிலைகளில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் சிலர் இறந்துவிட்டனர். சிலர், பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் அவர்கள் வகித்து வந்த பதவிகள் காலியாக உள்ளன.

இவ்வாறாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மீன்துறை ஆணையர், கூட்டுறவுச் சங்கங்க ளின் பதிவாளர் (வீட்டுவசதி), கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர், தொழில் துறை மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர் மற்றும் பால்வளத்துறை ஆணையர் ஆகிய செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 536 கூட்டுறவுச் சங்கங்களில் 937 நிர்வாகக்குழு உறுப்பினர் பணியிடங்களும், 168 கூட்டுறவுச் சங்கங்களில் 108 தலைவர் மற்றும் 66 துணைத் தலைவர் பணியிடங்களும் தற்போது காலியாக உள்ளன.

இடைத்தேர்தல்

மேற்குறிப்பிட்ட பணியிடங் களை இடைத்தேர்தல் மூலம் நிரப்பு வதற்கான தேர்தல் திட்டத்தையும், தேர்தல் அட்டவணையையும் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இது தொடர்பான தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

இந்த 937 நிர்வாகக்குழு உறுப்பினர் காலிப்பணியிடங்களில் 344 பணியிடங்களுக்கு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினத்தவரும், 195 பணியிடங்களுக்கு பெண்களும் மற்றும் 398 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினரும் தேர்ந்தெடுக் கப்படவேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கிடையாது.

வேட்புமனுத் தாக்கல்

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை 29.09.2014 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை தாக்கல் செய்யலாம். அன்று மாலை 5.30 மணிக்குள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே மாலை 6.00 மணிக்கு தகுதியான தேர்தல் அலுவலரால் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் செப்.30-ம் தேதி 2014 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5 மணிக்கு போட்டியிடும் வேட்பா ளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்குகளை எண்ணும் பணி அக்.7-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர், துணைத்தலைவர் தேர்தல்

தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் அறிவிப்பு, அக்டோபர் 07-ம் தேதியன்று தேர்தல் அலுவல ரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 11.10.2014 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான மண்டல இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

தற்பொழுது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அல்லாமல் கடந்த ஆகஸ்ட் 2013 முதல் இதுவரை கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏழு முறை இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 5648 கூட்டுறவுச் சங்கங்களில் காலியிடம் ஏற்பட்ட 11483 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளை நிரப்பிட தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இடைத் தேர்தல்கள் மூலமாக 259 கூட்டுறவு சங்கங்களில் 174 தலைவர் பதவிகளையும், 98 துணைத்தலைவர் பதவிகளையும் நிரப்பிட தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறவுள்ளது எட்டாவது இடைத்தேர்தல் ஆகும்.

இவ்வாறு ம.ரா. மோகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x