கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்’ - ராதாரவி கிண்டல்

கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்’ - ராதாரவி கிண்டல்
Updated on
1 min read

‘கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம். 10 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும்’ என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி தனியார் இணையதள சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரியும். ஆகவே முறைப்படி கூட்டணியை அவர்கள் அறிவித்தபோது, பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ யாருக்குமே ஏற்படவில்லை. மிச்சசொச்ச அதிமுக ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, மோடியின் தயவு அதிமுகவுக்கு வேண்டும். அதனால் இப்படி கூட்டணிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதிமுகவுடனும் பாஜகவுடனும் பாமக கூட்டணிவைத்ததைத்தான் யாராலும் சகித்துக்கொள்ளமுடியவில்லை. ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்ற வார்த்தை, ராமதாஸ் ஐயாவுக்கு சரியாகப் பொருந்தும். பாஜகவை கிழிகிழியென்று கிழித்துக்கொண்டே இருந்தார். அதேபோல், அதிமுக செய்த ஊழல்களையெல்லாம் பட்டியலிட்டு, புத்தகமே போட்டார். ஆளுநரிடம் சென்று புகார் கொடுத்தார். அப்பேர்ப்பட்ட ராமதாஸ் ஐயா, இப்படி அதிமுகவுடனும் பாஜகவுடனும் கூட்டு சேருவார் என்றதும், மக்களே ஒருமாதிரி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் மெகா கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதெப்படி மெகா கூட்டணியாக முடியும்? அதிமுக, பாஜக, பாமக இணைந்துவிட்டால், அது மெகா கூட்டணியா? மெகா கூட்டணி என்று இதுவரை எவரெல்லாம் சொல்லிவந்தார்களோ, அவர்கள் எல்லோருமே தோற்றுதான் போயிருக்கிறார்கள்.

கமல்ஹாசன் எனக்கு பால்ய நண்பர்தான். இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராமதாஸ் ஐயா, கமலுடன் கூட்டணி வைத்திருக்கலாம். பத்து தொகுதிக்கு மேலேயே ஒதுக்கித்தருவார் கமல். நல்லவேளை, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால், இருக்கிற கோடிக்கணக்கான கட்சிகளுடன் அந்தக் கட்சியும் ஒன்றாகியிருக்கும்.

இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in