Published : 06 Mar 2019 09:15 PM
Last Updated : 06 Mar 2019 09:15 PM

ரஃபேல் விமான பேர ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்: திருமாவளவன்

ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர்களுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரஃபேல் விமான பேரம் தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்திய 'தி இந்து' ஆங்கில நாளேடு மற்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார். 

ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக இந்தக் கருத்து அமைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி ரஃபேல் விமான பேரத்தில் உண்மையை வெளிப்படுத்திய 'தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ஆகியவற்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அரசின் அச்சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

ரஃபேல் விமான பேரம் தொடர்பான வழக்கில் சீராய்வு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திலிருந்து ரஃபேல் பேரம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அப்படி திருடப்பட்ட ஆவணங்களை சில ஊடகங்கள் வெளியிட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்ப்பதாகவும், அந்த ஊடகங்கள்மீது அரசு ரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது ஊடகங்களை அச்சுறுத்துவதாக உள்ளது. அரசின்  ஊழலை மறைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திலேயே இப்படி ஊடகங்களை மிரட்டும்விதமாக தலைமை வழக்கறிஞர் பேசியிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. ரஃபேல் பேரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்ற ஐயத்தை தலைமை வழக்கறிஞரின் இன்றைய பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர்களுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x