Published : 21 Mar 2019 05:40 PM
Last Updated : 21 Mar 2019 05:40 PM

பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தேமுதிக துணை செயலாளரும், பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷின் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதீஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. தேமுதிகவின் துணை செயலாளராக சுதீஷ் செயல்பட்டு வருகிறார். விஜயகாந்துக்கு பக்கத்துணையாக உடனிருந்த சுதீஷ் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுதீஷ் கட்சி நிர்வாகம் மற்றும் கேப்டன் டிவி பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையிலும் சுதீஷ் ஈடுபட்டு வந்தார். பிரேமலதா, சுதீஷ் இருவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை எதிர்த்து கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடுகிறார். போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதீஷின் வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுதீஷ் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள வெங்கடேஷ்வரா நகர்,  2-வது குறுக்குத் தெருவில் வசிக்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவரது வீட்டில் திடீரென 3 போலீஸார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையம், வடபழனி உதவி ஆணையர் வட்டாரத்தில் விசாரித்தபோது, சுதீஷ் தரப்பில் எவ்வித பாதுகாப்பும் கோரவில்லை என்று தெரிவிக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது உதவி ஆணையர் அல்லது காவல் ஆணையரிடம் மனு அளிக்கலாம்.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது பாதுகாப்பு தேவை என்றால் பரிசீலித்துப் பாதுகாப்பு வழங்கப்படும். இதுவரை விஜயகாந்த்கூட போலீஸ் பாதுகாப்பு கேட்காத நிலையில் சுதீஷுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது டிஜிபி, காவல் ஆணையர் நினைத்தால் நேரடியாக பாதுகாப்புக்கு உத்தரவிடலாம். ஆனால் அதற்கான தேவை என்னவென்று தெரியவில்லை என்றனர்.

ஆகவே, மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். சுதீஷுக்கு ஒரு தலைமைக் காவலர், 2 காவலர்கள் மற்றும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x