

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் கலைராஜன் இணைந்தார். அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் இயங்கி வந்தார். இந்நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நீக்கி நேற்று டிடிவி தினகரன் அறிவித்தார். திமுகவில் வி.பி.கலைராஜன் இணைய உள்ளதை அடுத்து இந்த முடிவு என தகவல் வெளியானது.
இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டது போன்றே திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார். அப்போது ஏற்கெனவே அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி உடனிருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.கலைராஜன், "திராவிட இயக்கம் பட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காகவும், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து உருவாக்கிய திமுக தழைத்து விளங்க தகுதியான தலைமை மு.க.ஸ்டாலின் தான். இழந்து விட்ட தமிழர்களின் உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளேன்.
பிரதமர் மோடி, பாஜக குறித்து கிஞ்சுற்றும் அஞ்சாமல், என்ன விளைவுகள் வந்தாலும் அதனை சந்திக்கத் தயார் எனும் அடிப்படையில், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே தலையாய பணி என்று நினைப்பவர் ஸ்டாலின். ஸ்டாலினை தலைவராகக் ஏற்றுக்கொன்டதில் பெருமை, மகிழ்ச்சி. அவர் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து எந்த பணியானாலும் அதனை நிச்சயமாக செய்து முடிப்பேன்.
இதையடுத்து செய்தியாளர்கள் தினகரனுடன் என்ன முரண்பாடு என கேள்வியெழுப்பினர். அதற்கு, "முரண்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது. திராவிட இயக்கத்துக்கு மிகப்பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மதவாத கும்பல் இன்று உள்ளது. தமிழகத்தைக் காக்க ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் இல்லாததால் திமுகவில் இணைந்தேன்" என்றார் கலைராஜன்.
வேறு யாராவது அமமுகவில் இருந்து திமுகவில் இணைவார்களா என்பதற்கு பதிலளித்த கலைராஜன், "சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் நிறைய பேர் இணைவார்கள். தேர்தல் நேரம் என்பதால் நான் மட்டுமே அவசரமாக இணைந்தேன்" என்றார்.
இதையடுத்து அருகிலிருந்த ஸ்டாலினிடம், திமுக அமமுகவை சவாலாக பார்க்கிறதா என கேள்வியெழுப்பினர். அதற்கு, "யாரும் எங்களுக்கு சவால் அல்ல. மத்தியில் பாஜக ஆட்சியையும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியையும் அழிப்பதே எங்களுக்கு சவால்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.